மதுரையில் தினமலர் வழிகாட்டி: முதல் நாளில் குவிந்த மாணவர்கள் | Kalvimalar - News

மதுரையில் தினமலர் வழிகாட்டி: முதல் நாளில் குவிந்த மாணவர்கள்மார்ச் 26,2013,08:17 IST

எழுத்தின் அளவு :

மதுரை: மாணவர்கள் பிளஸ் 2க்கு பின், என்ன படிப்புக்களை தேர்வு செய்யலாம் என்பது குறித்து, தினமலர் மற்றும், சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி, ஆராய்ச்சி நிறுவன பல்கலை இணைந்து, மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் நடத்தும், வழிகாட்டி நிகழ்ச்சி, நேற்று துவங்கியது.

முதல் நாள் நிகழ்ச்சியை, பல்கலை தலைவர், ஏ.சி.எஸ்.அருண்குமார், குத்து விளக்கேற்றி துவக்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் கண்காட்சி அரங்கை, மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா திறந்து வைத்தார். முதல் நாளிலேயே, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதியது.

நிகழ்ச்சியில் கருத்தரங்கை துவக்கி வைத்து, பல்கலை திட்ட இயக்குனர் வாசுதேவன் பேசியதாவது: பள்ளி படிப்பை முடித்த நீங்கள், எதிர்காலம் கருதி வேலை வாய்ப்புக்களை தரும் படிப்புக்களை தேர்வு செய்யும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவு, உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

ஒரு திட்டத்தை வகுத்து, அதை நிறைவேற்றுவதற்கான செயலாக்கத்தை நோக்கி பயணிக்க வேண்டும். தடைகளை தகர்க்கலாம் அவ்வாறு செல்லும்போது வரும் தடைகள், தகர்த்து வெற்றி பெறுவது குறித்தும், ஆய்வு செய்ய வேண்டும். பிளஸ் 2வில் நீங்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், தேர்வு செய்வது வேலைக்கு தகுந்த படிப்பாக இருக்க வேண்டும்.

பட்டப்படிப்புகள் படித்து வெளியேறும், 35 சதவீத மாணவர்களே, சிறப்பான வேலைக்கு செல்கின்றனர். படிக்கும்போதே, வேலைக்கான தகுதியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

"சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி" என, தமிழக கடலோர காவற்படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு பேசியது: ஒவ்வொரு மாணவருக்கும், பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள், திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. நல்ல மதிப்பெண் பெற்றால், நல்ல கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்து, அதிக சம்பளத்தில், உடனடியாக வேலை கிடைக்கும். சாதிக்க ஆசைப்படுங்கள்.

அந்த ஆசை மனதில் இருந்தால் தான் விரைவில் அடைய முடியும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பதவிகள், சமுதாயத்தில் நல்ல மரியாதை உள்ளவை. திட்டமிட்டு, ஒரு நாளைக்கு, எட்டு மணி நேரம் படித்தால், நிச்சயம், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற, உயர் பதவிகளை அடைய முடியும்.

இதனால், சிறு வயதில் உயர்ந்த பதவி, சமுதாயத்தில் அங்கீகாரம், தலைமைப் பண்பு, பொறுப்புக்கள் கிடைக்கும். இன்றைக்கு பொறியியல் படித்தவர்கள் அதிகம் பேர், இப்பதவிகளை வெல்கின்றனர்.

படித்தால் மகிழ்ச்சி தரக் கூடிய பாடங்களை தேர்வு செய்யுங்கள். மெயின் தேர்வு வரை, மொழிப் பாடங்களில் தேர்வு எழுதலாம். வினாக்கள் அமைப்பை தெரிந்து வைத்திருக்க வேண்டும். நேர்காணல் உட்பட, மொத்தம், 2,300க்கு, 1,300 மதிப்பெண் பெற்றால், நிச்சயம், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று விடலாம்.

எடுக்கும் மதிப்பெண்ணிற்கு ஏற்ப, 22 உயர் பதவிகளை, அடுத்தடுத்து தேர்வு செய்யலாம். மாணவர்கள் ஆங்கிலத்தில் பேச்சு மற்றும் எழுத்து திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு விடாமுயற்சி மற்றும் பயிற்சியும் அவசியம். இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் கடல்சார் அறிவியல் மற்றும் கடல் ஆய்வு கல்வி குறித்து, கடல்சார் துறையில் அனுபவம் வாய்ந்த வல்லுனர் நரசய்யா பேசியது: பொருளாதார சீர்குலைவு சீரடைந்த பின், தற்போது கடல் மற்றும் கடல் ஆய்வு படிப்புக்களுக்கு வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

வணிகத்தில் 95 சதவீதம் கடல் வழிதான் நடக்கிறது. கடல்சார் மற்றும் நாட்டிக்கல் சயின்ஸூக்கான அரசு பயிற்சி மையங்கள் மும்பை, கோல்கத்தா, சென்னையிலும், பிற பகுதிகளில் தனியார் கல்லூரிகளிலும் இப்படிப்புகள் உள்ளன. பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்த மாணவர்கள் இத்துறையை தேர்வு செய்யலாம்.

கப்பல் பொறியாளர், மாலுமி, பணியாளர்கள், உலக அளவில் அதிக எண்ணிக்கையில் தேவையாக உள்ளனர். அதற்கான சம்பளமும் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் கப்பல் போக்குவரத்து வளர்ச்சி 7 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கிறது. இந்திய மாலுமிகளை உலகில் எந்த நாடுகளும் பணியில் சேர்த்துக்கொள்ளும் நிலை உள்ளது. 52 ஆயிரம் இந்தியர்கள், வெளிநாட்டு கப்பல்களில் வேலை செய்கின்றனர்.

வருங்காலத்தில் மாலுமிகளின் தேவை அதிகரிக்கும். உலகில் கப்பல்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள முதல் 20 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நமது கப்பல் பயிற்சி தளம் சிறப்பாக உள்ளது. அரசு பயிற்சி மையங்களில் இப்பிரிவு பாடங்களில் சேரும் பெண்களுக்கு, கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை உள்ளது. கப்பலில் பணியாற்றியவர்கள் ஓய்வு பெற்று திரும்பும் போது, தரைசார்ந்த வேலைகளும் அவர்களுக்கு எளிதில் கிடைக்கின்றன.

ஒரு நாட்டின் வணிகம் ஒரு சதவீதம் அதிகரிக்க கப்பல் போக்குவரத்தில் 7 சதவீதம் அதிகரிக்க வேண்டும். கடல்சார் துறையில் தற்போதுள்ள வேலை வாய்ப்புக்கள், 2015ம் ஆண்டில் மூன்று மடங்கு உயரும் என, கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.

"வாழ்வில் வெற்றியாளராக இருப்பது எப்படி" என்ற தலைப்பில் தன்னம்பிக்கை பேச்சாளரும், நடிகருமான அஜய் ரத்னம் பேசியதாவது: வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் முயற்சி அவசியம். உங்கள் கையெழுத்து எப்போது ஆட்டோகிராபாக மாறுகிறதோ அப்போதுதான் நீங்கள் ஒரு வெற்றியாளர். நம்பிக்கை என்பதும் அவசியம். நம்பிக்கை இருந்தால் தான் வெற்றி கிட்டும். படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்வர முடியும்.

மாணவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள துறையை தேர்வு செய்ய வேண்டும். ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். முயற்சி எப்போதும் தோற்பதில்லை. சாதிக்க வேண்டும் என்ற வெறியை ஒவ்வொரு மாணவரும் வளர்த்துக்கொண்டால், எளிதில் வெற்றியாளனாக முடியும். நாம் என்னவாக வேண்டுமோ அதை அடைய, நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேரம் பயிற்சி செய்யவேண்டும், என்றார்.

"அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங்" படிப்புகள் எதிர்காலம் குறித்து சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி அனிமேஷன் துறை தலைவர் தினேஷ்குமார் பேசியதாவது:

கற்பனை திறன் உள்ள மாணவர்கள் இத்துறையை தேர்வு செய்தால் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. 2டி அனிமேஷன் துறையில் ஓவியம் வரைய தெரிந்தால் கலக்கலாம். தற்போது குழந்தைகளை அதிகம் கவர்ந்துள்ள "சோட்டா பீம்" 40 நிமிடங்களில் டிசைன் செய்யப்பட்டது. அந்த நபர் ரூ.3 லட்சம் சம்பளம் பெற்றுள்ளார்.

எம்.என்.சி., கம்பெனிகளில் கிராபிக் டிசைனிங் பிரிவில் ஏராளமான வேலைவாய்ப்புக்கள் காத்திருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 5095 வெப் டிசைன் கம்பெனிகள் உள்ளன. அதேபோல், சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பிலும் சவுன்ட், எடிட்டிங், விஷ்வல் எபக்ட் போன்றவற்றில், அனிமேஷன் துறையின் பங்கு தவிர்க்க முடியாததாகி உள்ளது.

கடந்தாண்டில் பொறியியல் துறையை விட அனிமேஷன் துறையில்தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அனிமேஷன் மற்றும் கிராபிக் டிசைனிங் படிக்க விரும்புவோர் பல்கலை அங்கீகரிக்கப்பட்ட முழுநேர கல்லூரிகளை தேர்வு செய்யுங்கள், என்றார்.

இந்நிகழ்ச்சியை, ராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி, கற்பகம் கல்வி நிறுவனங்கள், நேரு குழும கல்வி நிறுவனங்கள், சி.ஆர்.பொறியியல் கல்லூரி, எஸ்.என்.ஆர். சன்ஸ் டிரஸ்ட், அமிர்தம் பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் ஆகியன இணைந்து வழங்கின.

பல்வேறு கல்வி நிறுவனங்களின் ஏராளமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல படிப்புகள் பற்றிய விபரங்கள் அறிந்து கொள்ளலாம். கல்லூரிகளின் விண்ணப்ப படிவங்கள், புரோச்சர்கள் இங்கேயே கிடைக்கின்றன. கல்லூரிகளில் உள்ள வசதிகள், கட்டண விபரங்களையும் தெரிந்து கொள்ள மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் அரிய வாய்ப்பு. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சி நடக்கின்றது. அனுமதி இலவசம்.

வழிகாட்டி நிகழ்ச்சியில் இன்று நடக்கும் கருத்தரங்கில், "என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எதை படிக்கலாம், அதை எப்படி படிக்க வேண்டும்" என புட்டுபுட்டு வைக்கிறார் ஜெயபிரகாஷ் காந்தி.

"கை நிறைய சம்பாதிக்க செய்யும் "சி.ஏ.,/ஏ.சி.ஏஸ்.,/ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்புகள்" பற்றி விவரிக்கிறார் சரவண பிரசாத்.

உலகுக்கே உணவிடும் "வேளாண் அறிவியல்" குறித்து பேசுகிறார் சுதாகர்.

"கால்நடை அறிவியல் கல்வியின் எதிர்காலம்" பற்றி கற்றுத்தருகிறார் டாக்டர் முருகானந்தம்.

நான்காவது தூண் எனப்படும் "ஊடகத்துறை படிப்புகள்" பற்றி விவரிக்கிறார் எஸ்.எல்.சி.எஸ்.,சின் மணிகண்டன்.

சுகாதாரம், அறிவியல் இரண்டையும் இணைக்கும் "ஹெல்த் சயின்ஸ்" படிப்புகள் பற்றி விவரிக்கிறார் டாக்டர் வாசுதேவன். மாணவர்களே வாருங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள், தினமலர் அழைக்கிறது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us