300 காலி பணியிடங்களால் அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மோசம் | Kalvimalar - News

300 காலி பணியிடங்களால் அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு மோசம்மார்ச் 19,2013,13:46 IST

எழுத்தின் அளவு :

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அங்கன்வாடி மையங்களில், 300 பணியாளர்கள் வரை பற்றாக்குறை உள்ளதால், குழந்தைகள் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின்விசிறி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் குழந்தைகள், வியர்வையில் குளிக்கும் அவலம் தொடர்கிறது.

இம்மாவட்டத்தில் 1,495 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மையத்திலும் ஒரு பணியாளர், உதவியாளர் (சமையல்) பணிபுரிகின்றனர். இவற்றில் இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. வாரத்திற்கு மூன்று நாட்கள் முட்டை, சுண்டல், உருளைக்கிழங்கு மற்றும் சத்துணவு மாவு வழங்கப்படுகிறது. கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், ஆர்.எஸ்.மங்கலம் உட்பட தாலுகா அளவில் செயல்படும் குறு அங்கன்வாடி மையத்தில் ஒரு பணியாளர் மட்டுமே பணிபுரிகிறார்.

பணியாளர்கள் பற்றாக்குறையால், குழந்தைகள் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கழிப்பிட வசதி இல்லாததால், திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான மையங்களில், மின்விசிறி இல்லாததால், குழந்தைகள் வியர்வையில் தவிக்கின்றனர்.

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில துணை தலைவர் முருகேஸ்வரி கூறியதாவது: நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் வழங்கப்படும் உணவு பொருட்கள், எடை குறைவாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான மையங்களில் குடிநீர் வசதி இல்லாததால், குழந்தைகள் பெரும் அவஸ்தை படுகின்றனர். இதுபோன்ற குறைபாடுகளை சங்க நிர்வாகிகள், மாவட்ட அலுவலரிடம் எடுத்து கூறியும் நடவடிக்கை இல்லை.

மையங்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையும் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. சமையல் காஸ் சிலிண்டர் முறையாக வழங்காததால், பல மையங்களில் விறகு அடுப்பு பயன்படுத்தும் அவலம் உள்ளது. பணியாளர்களுக்கு மாதந்தோறும் 20ம் தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. கடலாடி, முதுகுளத்தூர், பரமக்குடி, மண்டபம் உள்ளிட்ட பெரும்பாலான வட்டாரங்களில் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. ஒருவர், இரண்டு மையங்களையும் ஒருங்கிணைத்து பார்ப்பதால், குழந்தைகளுக்கு மதியம் 12 மணிக்கு சாப்பாடு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, என்றார்.

திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்) குணசேகரி கூறியதாவது: பணி ஓய்வு உள்ளிட்ட பல காரணங்களால் பணியாளர்கள் காலி பணியிடங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகளுக்கு தாமதமின்றி உணவு வழங்கப்படுகிறது. ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில், மண்டபம் உள்ளிட்ட வட்டாரங்களில் 285 மையங்கள் சீரமைப்பு பணி நடந்துள்ளது. மிகவும் சேதமடைந்த மையங்களை இடித்துவிட்டு, புதிதாக கட்டப்படவுள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பு கருதி வாடகை கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், என்றார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us