வேதியியல் வினாத்தாள் எளிது: சென்டம் அதிகரிக்கும் | Kalvimalar - News

வேதியியல் வினாத்தாள் எளிது: சென்டம் அதிகரிக்கும்மார்ச் 19,2013,07:56 IST

எழுத்தின் அளவு :

தேனி: பிளஸ் 2 வேதியியல் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது என்பதால், பிற பாடங்களை காட்டிலும் வேதியியல் பாடத்தில், "சென்டம்" எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால், பொறியியல், மருத்துவ மாணவர்களுக்கு, எதிர்பார்க்கும் கட்- ஆப் மதிப்பெண் பெற, வேதியியல் தேர்வு ஓரளவு கை கொடுக்கும், என்ற நம்பிக்கை உள்ளதாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

தேர்வு குறித்து தேனி மாணவர்கள், ஆசிரியர் கருத்து: எஸ்.லாவண்யா (பி.சி.,கான்வென்ட் மேல் நிலைப்பள்ளி,தேனி): வேதியியல் வினாத்தாள் மிகவும் எளிது. கேள்வித்தாளை பார்த்தவுடன் நம்பிக்கை பிறந்தது. பகுதி-1ல், ஒரு மார்க் கேள்விகளில் பாதி, பாட புத்தகத்தில் உள்ள வினாக்களில் இருந்து தான் வந்தன.

மீதமுள்ள கேள்விகள், முந்தைய பொது தேர்வு வினாத்தாள்களில் இருந்து கேட்கப்பட்டிருந்தன. பகுதி இரண்டில், 3 மார்க் வினாக்களும் எளிதாக இருந்தன. வினா வங்கியில் இருந்து தான் கேட்கப்பட்டிருந்தன. பகுதி மூன்றில், 5 மார்க் கேள்விகள் அடிக்கடி வகுப்பு தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள்.

"தினமலர் ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில் வழங்கிய, பரீட்சையில் வரும் கேள்விகள் மற்றும் "புளூ பிரின்ட்" புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கட்டாயமாக எழுத வேண்டிய, கடைசி கணக்கு கேள்வியும் மிகவும் எளிது.

கே.விஜயகுமார் (நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி) : வேதியியல் வினாத்தாள் எளிமையாக இருந்ததால், நம்பிக்கை பிறந்துள்ளது. ஒரு மார்க் கேள்விகள், சமன்பாடு, சிந்திந்து பதில் அளிக்கும் வகையில் இல்லாமல், மிகவும் எளிதாக இருந்தது.

3 மார்க் வினாக்களில், கரிம வேதியியலில் இருந்து கடினமான சமன்பாடுகளை கேட்காமல், இலகுவாக பதில் அளிக்கும் வகையில் இருந்தது. வினாத்தாள் அமைப்பின் படி (புளூ பிரின்ட்) அனைத்து பகுதிகளிலும் இருந்தும், கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

5 மார்க் கேள்வியில், வினை வகையின் முக்கிய சிறப்பு பண்புகள் விவரி? என்ற கேள்வி, 10 மார்க் கேள்வியில் கேட்கப்பட வேண்டிய, 5 மார்க் கேள்வியில் கேட்கப்பட்டுள்ளது. பிரிவு-இ பகுதியில் படம் வரைந்து, விளக்கும் கேள்விகள் அதிகம் கேட்கப்படாததால், நேரம் மிச்சமானது.

மொத்தத்தில் முந்தைய பொதுத் தேர்வு வினா வங்கிகளை படித்தவர்களுக்கு, இந்த தேர்வு மிகவும் எளிது.

ஏ.அய்யப்பன் (முதுகலை வேதியியல் ஆசிரியர், அரசு மேல்நிலைபள்ளி, சிலமலை): வேதியியலில் தேர்ச்சி பெறுவது கடினம், என நினைத்த மாணவர்கள் கூட, அதிக மார்க் எடுக்கும் வகையில் கேள்விகள் இருந்தன. பள்ளிகளில், அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகள் தான் கேட்கப்பட்டிருந்தன.

கரிம, கனிம, வேதியியல் பகுதிகளில் இருந்து, வினாத்தாள் அமைப்பின் படி கேட்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் ஏற்ற வகையில், வினாத்தாள் அமைந்திருந்தது. கேள்வி-46 ல், "கிளிசரோஸ்" என்றால் என்ன? என்ற கேள்வி, இதுவரை கேட்கப்படாத மிகவும் எளிதான கேள்வி.

பொறியியல், மருத்துவம் "கட் ஆப் மார்க்" எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு, வேதியியல் பாடம் கை கொடுக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சி.உமா மகேஸ்வரி (முதுகலை வேதியியல் ஆசிரியர்), ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரை: இந்தாண்டு பிளஸ் 2 வேதியியல் தேர்வு வினாக்கள் எளிமையாக இருந்தன. மூன்று, ஐந்து, 10 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் எளிமையாக இருந்ததால், மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கடந்தாண்டு மற்றும் அரையாண்டு, திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களே திரும்பவும் வந்திருந்ததால், மாணவர்கள் விடைகளை எளிதாக எழுதினர். குறிப்பாக, 70வது வினா (கட்டாய வினா) மிக எளிதாக இருந்தது.

வினாக்கள் சுற்றி வளைத்து கேட்காமல், நேரடியாக கேட்டிருந்தனர். குறிப்பாக, இயற்பியல், வேதியியலில் பெரிய வினாக்கள் நேரடியாக கேட்கப்பட்டு இருந்தன. கரிம வேதியியலில் "பிராப்ளம்" எளிதாக இருந்தது. "சாய்ஸ்" வினாக்களும் எளிமையாக இருந்ததால் மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.

கடினமான வினாக்கள் இல்லை. ஒருமதிப்பெண் வினாக்களில் சில வினாக்கள், அரசு பள்ளி மாணவர்களுக்கு லேசான சந்தேகத்தை ஏற்படுத்தியது, என்றனர்.

வினாக்கள் எளிமை என்பதால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே விடைகளை எழுதினர். இந்தாண்டு கணிதம், இயற்பியல் கஷ்டமாக இருந்ததாக கருதிய மாணவர்கள், வேதியியல் தேர்வில் நூறுசதவீத மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. மொத்தத்தில், சாதாரண மாணவர்களுக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்கும், என்றார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us