"வணிக மேலாண்மை படிப்புகளுக்கு சிறப்பான எதிர்காலம்" | Kalvimalar - News

"வணிக மேலாண்மை படிப்புகளுக்கு சிறப்பான எதிர்காலம்"மார்ச் 17,2013,08:51 IST

எழுத்தின் அளவு :

மதுரை: "வணிக மேலாண்மை படிப்புகள் முடிந்து வெளியேறும் மாணவர்களுக்கு அதிக சம்பளத்துடன் சிறப்பான எதிர்காலம் உள்ளது" என, தினமலர் நாளிதழ் நடத்திய நிகழ்ச்சியில் பேசிய வல்லுனர்கள் தெரிவித்தனர்.

ஆண்டுதோறும் "தினமலர்" சார்பில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு "ஜெயித்துக் காட்டுவோம்", பிளஸ் 2 மாணவர்களுக்கு "வழிகாட்டி", பட்டப்படிப்பு படிக்கும் மற்றும் முடித்த மாணவர்களுக்கு, வணிக மேலாண்மை மேற்படிப்புக்களுக்கு வழிகாட்டும் "கேட்வே பி ஸ்கூல்ஸ்" என்ற நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

இந்தாண்டுக்கான நிகழ்ச்சி "தினமலர்" நாளிதழ் மற்றும் பார்க் குளோபல் கல்வி நிறுவனங்கள் சார்பில் மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நேற்று நடந்தது. கருத்தரங்கை துவங்கி வைத்து, கோவை பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயலாளர் அனுஷா பேசியதாவது:

மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணம் இது. எம்.பி.ஏ., படிப்பை தேர்வு செய்வதற்கு சரியான நேரம் இது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு, உலகமயமாக்கல் விளைவால் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும், வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.

உதாரணமாக, பின்லாந்தின் நோக்கியோ மொபைல் கம்பெனி, கொரியாவின் ஹூண்டாய் கார் கம்பெனியால் பல நாடுகளில் வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. சிறப்பான கட்டமைப்பு உள்ள கல்லூரியை தேர்வு செய்வதில், மிகுந்த கவனம் தேவை. சிறப்பான கல்லூரி என்பது நல்ல மேலாளர்களை உருவாக்குவதுடன் சிறந்த தலைமைப் பண்பு உள்ளவர்களாகவும் உருவாக்க வேண்டும், என்றார்.

"ஏன் எம்.பி.ஏ.," என்ற தலைப்பில் சென்னை கேலக்ஸி மேலாண்மை கல்லூரி இயக்குனர் ரமேஷ் பிரபா பேசியதாவது: வணிக மேலாண்மை படிப்பு முடித்தவர்களுக்கு, அதிக சம்பளத்துடன் சிறப்பான எதிர்காலம் உள்ளது. 2006-07 கல்வி ஆண்டில் 1,132 கல்வி நிறுவனங்களில் 94 ஆயிரத்து 704 பேர் படித்தனர். 2011-12ல் 2,450 கல்வி நிறுவனங்கள் மூலம், 3 லட்சத்து 85 ஆயிரத்து 8 பேர் எம்.பி.ஏ., முடித்துள்ளனர்.

இதில் தென் மாநிலங்களில் 1618ம், தமிழகத்தில் 391 கல்வி நிறுவனங்களும் உள்ளன. இதில், மார்க்கெட்டிங், பைனான்ஸ், மனித வளம், சிஸ்டம்ஸ், ஆப்பரேஷனல் ரிசர்ச் என பல்வேறு பொது பிரிவுகள் உள்ளன. எம்.பி.ஏ.,விற்கும், பி.ஜி.டி.எம்., படிப்புக்கும் அதிக வேறுபாடு இல்லை.

இப்படிப்புகளை முடிப்பவர்களுக்கு, கார்ப்பரேட் கம்பெனிகளில் அதிக சம்பளத்துடன் நல்ல வரவேற்பு உள்ளது. வாழ்க்கை முறை மாற்றம், தலைமை பண்பு உள்ளிட்டவை வளர வழி வகுக்கிறது. பல தொழில் முனைவோர்களை உருவாக்குகிறது. நமக்கு உள்ள தயக்கத்தை நாம் விட வேண்டும். தொழில் துறையில் சாதிக்கலாம்.

நல்ல கல்லூரிகளை தேர்வு செய்வது முக்கியம். இதற்கு "டான்செட்" உட்பட போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று தயாராக வேண்டும், என்றார்.

"நுழைவு தேர்வுக்கு தயாராகும் முறை" குறித்து "டைம்" நிறுவன பிரமோத் ஜோசப் பேசியதாவது: மேலாண்மை படிப்புகளுக்கு டான்செட், கேட், ஜிமேட் ஆத்மா போன்ற போன்ற பல்வேறு நுழைவு தேர்வுகள் உள்ளன. கேள்விகள் மாணவர்களின் ஆங்கில அறிவை சோதிக்கும் வகையில் இருக்கும்.

மொழித் திறன், ஆங்கில வார்த்தைகள், இலக்கணம் போன்ற பகுதியில் இருந்து கேள்விகள் இடம் பெறும். அதேபோல் "பாராகிராப்" கொடுத்து அதற்கு கீழ் கேள்விகளும் கேட்கப்படும். கணிதத்தில் விதிகள், சமன்பாடுகள், டையகிராம், டெஸ்ட் ஆப் ரீசனிங், டேடா ஷபிசியன்சி மற்றும் பொது அறிவு பகுதியில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.

திட்டமிட்டு படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம். இதன் மூலம் சிறந்த கல்லூரியில் சேர வாய்ப்பு ஏற்பட்டு, அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும்" என்றார்.

"எம்.பி.ஏ., படித்த பின் வாய்ப்புக்கள்" என்ற தலைப்பில் கிரேட் லேக்ஸ் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் ஸ்ரீராம் பேசியது: தொண்டு நிறுவனங்கள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் அதிக அளவில் மேலாளர்கள் தேவையாக உள்ளனர்.

கார்ப்பரேட் கம்பெனி ஆலோசகர், பைனான்ஸ், மார்க்கெட்டிங், வங்கி போன்ற துறைகளில் அதிக சம்பளத்துடன் மேலாளர்கள் பணிகளுக்கு செல்லலாம். உலகமயமாக்கல் விளைவாக வெளிநாடுகளிலும் ஏராளமான வாய்ப்புகள் ஏற்படும். கொரியா, ஜப்பான், மலேசியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் மில்லியன் கணக்கில் தொழில் முனைவோர்கள் உள்ளனர். இந்தியாவிலும் இதுபோன்று தொழில் முனைவோர்கள் உருவாகலாம், என்றார்.

"நல்ல நிறுவனத்தை தேர்வு செய்ய வழி" என்ற தலைப்பில் ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் பேராசிரியர் புகழேந்தி பேசியதாவது:

ஆண்டுதோறும் 3.09 லட்சம் பேர் வணிக மேலாண்மை படிப்புக்களை முடித்து வெளியேறுகின்றனர். நாட்டில் 4 ஆயிரம் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் எந்த நிறுவனங்களை தேர்வு செய்து படிப்பது என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

எம்.பி.ஏ., மற்றும் பி.ஜி.டி.எம்., படிக்க விரும்புவோர் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அதில் படிப்பது நல்லது. கல்வி நிறுவனங்களில் உட்கட்டமைப்பு, அமைவு இடம், நூலகம், ஆய்வகம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

தரமான பேராசிரியர்கள், குறைந்தது 3 ஆண்டுகளில் கல்லூரியில் இருந்து வளாக நேர்காணலில் எத்தனை பேர் தேர்வானார்கள், பழைய மாணவர்கள் நல்ல பணியில் உள்ளனரா என்பதையும் கேட்டு தெரிந்து, கல்லூரியை தேர்வு செய்வது நல்லது.

"வெளிநாடுகளில் எம்.பி.ஏ., படிப்புகள்" என்ற தலைப்பில், குளோபல் ரீச் நிறுவனத்தின் தலைவர் சபேசன் மாணிக்கவாசகம் பேசியதாவது:

இந்திய கல்விமுறை கிளார்க்குகளை உருவாக்கும் வகையை சேர்ந்தது. ஆங்கிலேயர் இடம் இருந்து பெறப்பட்ட இக்கல்வி முறையில் தற்போது வரை எவ்வித மாற்றமும் இல்லை. பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்.

வெளிநாட்டு கல்வி முறை மேலாளர்களை உருவாக்குகின்றன. அங்கு கல்வி மற்றும் தொழில் துறைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக உள்ளன. வெளிநாட்டில் படிப்பது முதலீடா அல்லது செலவா என்று வாதம் செய்தால் அது முதலீடு என்று தான் சொல்ல வேண்டும்.

வெளிநாட்டில் படிக்க முடிவு எடுத்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அங்கீகாரம் பெற்றதா, படித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்குமா போன்ற விவரங்களை தெரிந்துகொள்ள வேண்டும். வெளிநாட்டில் படிப்பதற்கு, நம் நாட்டில் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வங்கி கடன் கிடைக்கிறது. கல்வி உதவி தொகையும் வழங்கப்படுகிறது, என்றார்.

"களைகட்டிய" கண்காட்சி: வணிக மேலாண்மை படிப்பிற்கான கண்காட்சியை பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா திறந்து வைத்தார். மேலாண்மை படிப்புகளை அளிக்கும் பல்வேறு கல்லூரிகள், சிறப்பு படிப்புகள் குறித்த தகவல்களை 40க்கும் மேற்பட்ட அரங்குகளில் காட்சிப்படுத்தியிருந்தன.

காலை 11 மணிக்கு துவங்கி, இரவு 7 மணி வரை கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, மேலாண்மை படிப்பு குறித்த முழுமையான விளக்க கையேடுகள், தினமலர் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன.


வாசகர் கருத்து

தினம் தினம், இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாக உள்ள தினமலருக்கு ஈடு இணை எதுவுமில்லை......
by vasudevan,India    18-மார்-2013 05:35:02 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us