சென்னை: இட விவகாரம் தொடர்பான வழக்கில், அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளதால், கிண்டி, கிங் நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில், புதிய மருத்துவக் கல்லூரி துவங்க இடம் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், கோவை, வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு, பல்கலைகளின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கு இதுரை, இணைப்பு கல்லூரிகளை தவிர, தனியாக மருத்துவக் கல்லூரி இல்லை.
இக்குறையை போக்கும் வகையில், 2007ம் ஆண்டு, ஆகஸ்ட்டில், மருத்துவ பல்கலை நிர்வாகம், ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், "2008 -09ம் கல்வியாண்டு முதல், பல்கலை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை துவக்க, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த பதிலில், "300 படுக்கை வசதியுடன் கூடிய, மருத்துவமனை மற்றும் மாநில அரசின், அத்தியாவசிய சான்றிதழ் இல்லாமல், புதிய மருத்துவக் கல்லூரி துவங்க அனுமதி அளிக்க முடியாது" என, தெரிவிக்கப்பட்டது.
மருத்துவக் கல்லூரி அமைய, கிண்டி, கிங் நோய் தடுப்பு மருத்துவ வளாகத்தில் உள்ள இடத்தை வழங்க வேண்டுமென மருத்துவ பல்கலை சார்பில் அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது. குறிப்பபிட்ட நிலம் தொடர்பாக, வழக்கு நடந்து வருவாதால், கல்லூரிக்கு தேவையான, 25 ஏக்கர் நிலத்தை தர இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கிங் நோய் தடுப்பு மருத்துவ நிலைய வளாக நில உரிமை வழக்கில், அரசுக்கு சாதகமாக ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதனால், குறிப்பிட்ட நிலம் அரசுக்கு சொந்தமாகியுள்ளது. இடம் கோரி, மருத்துவ பல்கலை, ஐகோர்ட்டில் தொடர்ந்த மற்றொரு வழக்கு விசாரணையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, குறிப்பிட்ட இடத்தில், மருத்துவ கல்லூரிக்கு இடம் வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. ஐகோர்ட்டின் உத்தரவையடுத்து, மருத்துவ கல்லூரிக்கான இடத்தை வழங்க, தமிழக அரசு முன்வருமா என்ற எதிர்பார்ப்பு, பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த எதிர்பார்ப்பை, அரசு பூர்த்தி செய்யும் பட்சத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, 19 ஆக உயர்வதுடன், ஆண்டுதோறும், குறைந்தபட்சம், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள், அரசு ஒதுக்கீட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது.
கோர்ட் தீர்ப்பிற்கு பின், மருத்துவப் பல்கலை நிர்வாகத்திடம் இருந்து இதுவரை, மருத்துவக் கல்லூரி கட்ட இடம் கோரப்படவில்லை என, மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்தன.