கேள்விக்குறியாகும் ஊட்டி அரசுக் கலைக் கல்லூரியின் எதிர்காலம் | Kalvimalar - News

கேள்விக்குறியாகும் ஊட்டி அரசுக் கலைக் கல்லூரியின் எதிர்காலம்ஜனவரி 19,2013,10:14 IST

எழுத்தின் அளவு :

ஊட்டி: பொன் விழாவை கடந்து செயல்படும், ஊட்டி அரசு கலை கல்லூரி கட்டட விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சை, கல்லூரியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகியுள்ளது.

ஊட்டி உருவாக காரணமாக இருந்த ஆங்கிலேயரான ஜான் சல்லிவன், தற்போதைய ஊட்டி அரசுக் கலை கல்லூரி கட்டடம் அருகே தனக்கென ஒரு குடியிருப்பை முதலில் அமைத்தார்.

கற்களால் கட்டப்பட்ட இந்த கட்டடம், "கல் பங்களா" "கன்னிமரா காட்டேஜ்" என அழைக்கப்படுகிறது. நிர்வாக பணிகளை மேற்கொள்ள அருகே ஒரு கட்டடத்தை மீண்டும் கட்டினார்; அந்த கட்டடம் கடந்த 1955 முதல், அரசுக் கலை கல்லூரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கட்டடமும் கடந்த 1905ம் ஆண்டைய ஆவணத்தின் படி, "கல் பங்களா முகப்பு" என பதிவாகியுள்ளது.

தொடரும் வளர்ச்சி: கல்லூரியில், தற்போது 3,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 14 இளங்கலை, 8 முதுகலை, ஏழு ஆராய்ச்சி படிப்புகள் உள்ளன. 78 நிரந்தர பேராசிரியர்கள், 51 கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளனர். பொதுப்பணித் துறையினர், கல்லூரியை பராமரித்து வருகின்றனர்.

கல்லூரியை மேம்படுத்த, மாணவர் எண்ணிக்கையை உயர்த்த பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு அரசு கலைக் கல்லூரிக்கும், தலா 100 லட்சம் ரூபாய் ஒதுக்கி, தகுதியுள்ள கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரம் உயர்த்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

"கல் பங்களா" சர்ச்சை: இந்நிலையில், ஊட்டி அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள கன்னிமரா காட்டேஜ், கல்லூரி முதல்வர் குடியிருப்பாக அரசை வலியுறுத்தியதன் அடிப்படையில், பயன்படுத்தப்பட்டு வருகிறது. "இக்குடியிருப்பை அருங்காட்சியகமாக மாற்ற, சில தனியார்கள் குடியிருப்பை காலி செய்ய, மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது" என, கூறப்படுகிறது.

கல்லூரி இயக்குனரகம், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பப்படும் எழுத்துப்பூர்வ கடிதங்களில், "கல் பங்களாவை (ஸ்டோன் ஹவுஸ்) காலி செய்ய வேண்டும்" என, கூறப்பட்டுள்ளது.

ஆவணப்படி, கல்லூரி முகப்பு கட்டடம் தான் "கல்பங்களா" என பதிவாகியுள்ளது. இக்கட்டடத்தில், பொருளாதாரம், வரலாறு, கணிதம், பாதுகாப்பு, தமிழ் துறை வகுப்புகள் தவிர, கல்லூரி நூலகமும் செயல்படுகிறது. "இந்த கட்டடத்தை தான் காலி செய்ய அரசு வலியுறுத்துகிறது" என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கல்லூரி வளர்ச்சிக்கு தடை?: அரசு கலைக் கல்லூரி, அதை சுற்றியுள்ள பகுதி 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது; இது, அரசு புறம்போக்கு என, ஆவணத்தில் பதிவாகியுள்ளது. அரசு புறம்போக்கு நிலத்தில் 10 ஆண்டு குடியிருந்தாலே, அவர்களுக்கு பட்டா கொடுக்கும் அரசு, 58 ஆண்டுகளாக கல்வி போதிக்கும் பணியை செய்து வரும் அரசு கலைக்கல்லூரி பெயரில், நிலத்தை பதிவு செய்து கொடுக்க இதுவரை ஆர்வம் காட்டாமல் இருப்பதும், கல்லூரி பயன்பாட்டில் உள்ள கட்டடத்தை அருங்காட்சியமாக மாற்ற ஆர்வம் காட்டுவதும், அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகம், வாடகை கட்டடத்தில், இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. அதை மேம்படுத்தி, அதன் பயன் மக்களை போய் சேர்வதற்கான நடவடிக்கையில் இறங்காமல், புதிதாக ஒரு அருங்காட்சியகம் ஏற்படுத்த "மெனக்கெடுவது" பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us