கே.வி.பி., கிளரிகல் தேர்வு ஒரு பார்வை | Kalvimalar - News

கே.வி.பி., கிளரிகல் தேர்வு ஒரு பார்வைஜனவரி 09,2013,15:40 IST

எழுத்தின் அளவு :

வங்கிக்கான கிளரிகல் மற்றும் அதிகாரி பணியிடங்களை ஐ.பி.பி.எஸ்., அமைப்பு நடத்தும் பொது எழுத்துத் தேர்வுகளின் மூலம் நிரப்பும் நடைமுறை அமலுக்கு வந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆகிவிட்டது. கடந்த 2011 டிசம்பரில் கிளரிகல் பதவிக்கான பொது எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்மூலம் பொதுத் துறை வங்கிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படுவதால் தங்கள் சிரமங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் எண்ணற்ற பட்டதாரிகள் இந்தத் தேர்வுகளை எதிர்கொண்டார்கள்.

மிகக் கடுமையான உழைப்பு தேவைப்படும் இந்தத் தேர்வு நடத்தப்பட்டு வெற்றிகரமாகத் தேறியவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது. நேர்காணலை அந்தந்த வங்கிகளே நடத்தும் என்ற பழைய முடிவுகளின்படி நேர்காணல்களும் நடத்தப்பட்டது.

ஒரு வங்கியில் வேலை கிடைத்த பின்பும் அதே நபர்களே அவர்களின் கூடுதல் மதிப்பெண்ணின் காரணமாக பல்வேறு வங்கிகளாலும் அழைக்கப்பட்டனர். மதிப்பெண் அடிப்படையிலேயே ஒவ்வொரு வங்கியும் தங்கள் நேர்காணல் அழைப்புகளை அனுப்பியதால் கடந்த ஐ.பி.பி.எஸ்., தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணல்களைத் தொடர்ந்து எதிர் கொண்டார்கள்.

நேர்காணல்களை அவர்கள் எதிர்கொண்டு பணி நியமனம் பெற்ற போதும், இயற்கையாகவே, சிறந்த வங்கி மற்றும் அவர்களுக்கேற்ற பணி இடம் என்ற தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கத்தில் இவர்களே மீண்டும் மீண்டும் நேர்காணல்களை எதிர்கொண்டதால் வெற்றி பெற்றும் நேர்காணலுக்கே செல்ல முடியாத பல்வேறு விண்ணப்பதாரர்கள் நொந்து சலிக்கும் நிலை ஏற்பட்டது. மறுபுறம் நிரப்பப்பட்ட காலி இடங்கள் மீண்டும் காலி இடங்களாகவே நீடிக்கும் துர்ப்பாக்கிய நிலையும் வங்கிகளுக்கு ஏற்பட்டது. ஐ.ஓ.பி., இந்தியன் பாங்குகள் இது போன்ற சூழ்நிலைகளை சந்தித்தன.

இது விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமன்றி தொடர்புடைய வங்கிகளுக்கும் பெரும் தலைவலியாக மாறியது. காலியிடங்கள் காலியிடங்களாகவே நீடிப்பதை தற்போது இவற்றில் காண முடிகிறது. இது போன்ற காரணங்களால் இனி நேர்காணல்களையும் ஐ.பி.பி.எஸ்., அமைப்பே பொதுவாக நடத்தும் என்ற முடிவுகள் ஏற்பட்டது.

தனியார் வங்கிகளும் ஐ.பி.பி.எஸ்., ஸ்கோரை பயன்படுத்திட உள்ள செய்தி பலரை உற்சாகப்படுத்தியது. பழைய தேர்வு முடிவுகள் மிகக் குறைந்த நாட்களுக்கே செல்லுபடியாகும் என்ற பதட்டத்துடன் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இருந்த நிலையில்தான் கரூர் வைஸ்யா வங்கி 126 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இதில் சிறிது நிம்மதி அடைந்த வெற்றியாளர்கள் தளராமல் விண்ணப்பித்தார்கள். ஆனால் கரூர் வைஸ்யா வங்கியும் அதிக ஐ.பி.பி.எஸ்., மதிப்பெண் பெற்றவரையே அழைப்பது என்னும் வியூகத்தில் மாட்டிக் கொண்டது. முதலில் குறைந்த மதிப்பெண்களை வரையறை செய்த கரூர் வைஸ்யா வங்கி பின்னர் அதனை அதிகப்படுத்தி நேர்காணல் அழைப்புகளை அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே அனுப்பியது. சட்ட ரீதியாக இந்த வங்கிகளின் செயல்கள் நியாயப் படுத்தப்பட்ட போதும், தனி மனித உணர்வு மட்டத்தில் இந்தப் பிரச்னையை நோக்கினால் தற்போது வேலையின்றி கடும் உழைப்பையும், பல்வேறு பிரச்னைகளையும் எதிர் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இதனால் பலனில்லை.

அதைவிட முக்கியம் வங்கி தனக்கான காலியிடங்களை நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பும் அதிகமில்லை. வேலையில் சேர்ந்தாலும் கூட, அதிக மதிப்பெண் பெற்றிருப்பவர் பிற வங்கிகளை நாடி இதை விலகிச் செல்வது மிக அண்மையிலுள்ள நிதர்சனம்.

மொத்தத்தில் ஐ.பி.பி.எஸ்., அமைப்பின் தேர்வு முறைகளின் குளறுபடி களும், வங்கிகளின் அதிக மதிப்பெண் பெற்றவர்களை கவரும் உத்தியும், நம்பிக்கையோடு இருந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் மனதில் ரணமாக வலிப்பதுதான் யதார்த்தமான உண்மை.

வேலைதேடும் இளைஞர்களுக்கு வேலையைக் கூட தராமல் இருக்கலாம், குறைந்த பட்சம் அவர்களின் நம்பிக்கையையாவது சிதைக்காமல் இருக்கலாம் என்ற எண்ணம் இவர்களுக்கு ஏன் தோன்றுவதில்லை என்பதே இன்றைய இளைஞர்களின் கருத்தாக உள்ளது.

கட் ஆப் மதிப்பெண் என விளம்பரப்படுத்தும்போது குறைவாகவும் பின்பு நேர்காணலுக்கு அழைக்கப்படும் போது மிக அதிகமாகவும் பலனடைந்திருப்பது பல்லாயிரக்கணக்கானவர்களிடமிருந்து விண்ணப்பக் கட்டணமாகப் பெறும் வங்கிகள் தான். தற்போது பிறந்திருக்கும் இந்தப் புத்தாண்டாவது இந்த இளைஞர்களுக்கு விடியலைத் தரட்டும்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us