ஆன்-லைன் வழி சான்றிதழ் சரிபார்ப்பு: அடுத்த கல்வி ஆண்டில் அமல் | Kalvimalar - News

ஆன்-லைன் வழி சான்றிதழ் சரிபார்ப்பு: அடுத்த கல்வி ஆண்டில் அமல்டிசம்பர் 27,2012,11:42 IST

எழுத்தின் அளவு :

சென்னை: ஆன்-லைன் வழியாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம், அடுத்த ஆண்டில் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தால், உயர்கல்வி நிறுவனங்கள், தங்களிடம் சேரும் மாணவர்களின் சான்றிதழ்களை, உடனுக்குடன் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ்கள் ஊடுருவலையும், எளிதில் தடுத்து நிறுத்த முடியும்.

பிளஸ் 2 தேர்வுக்குப் பின், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு உயர்கல்வி படிப்புகளில் சேர்கின்றனர். இவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆண்டுதோறும் அரசு வேலைகளில் சேர்பவர்களின் சான்றிதழ்கள் என, ஆண்டுக்கு பல லட்சம் சான்றிதழ்களை, சரிபார்க்க வேண்டிய பெரும் பணியால், தேர்வுத்துறை திணறி வருகிறது.

தேர்வுத்துறை இயக்குனரகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவுகளில், போதுமான பணியாளர்கள் இல்லை. இதனால், லட்சக்கணக்கான சான்றிதழ்கள், சரிபார்ப்புக்காக, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் இருக்கின்றன. இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு, முந்தைய ஆட்சியில், ஆன்-லைன் வழியாக, சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

தேசிய தகவல் மையத்தின் (நிக்), தொழில்நுட்ப உதவியுடன், ஆன்-லைன் வழியாக, சான்றிதழ் சரிபார்க்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இதற்கு தேவையான மின்னணு சாதனங்கள் வாங்க, 8.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், ஒரு வடிவமைப்பு உதவியாளர் பணியிடமும் அனுமதிக்கப்பட்டது.

திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, நிக் தேர்வுத்துறை அதிகாரிகள், டேட்டா சென்டர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர், பல்வேறு கட்டங்களில் கூடி, விவாதித்தனர். இதைத் தொடர்ந்து, தேவையான மின்னணு சாதனங்கள் வாங்கப்பட்டன. வடிவமைப்பு உதவியாளர் பணியிடமும் நிரப்பப்பட்டது. ஒட்டுமொத்த பணிகளையும், தேர்வுத்துறை இயக்குனரகம் மேற்பார்வை செய்து வருகிறது.

திட்டத்தின்படி, கணிசமான எண்ணிக்கையில், மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும், தேர்வுத்துறையால், குறியீட்டு எண் ஒன்று வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய விரும்பும் கல்வி நிறுவனங்கள், சரிபார்ப்புக்கான கட்டணத்தை செலுத்தி, அதற்குரிய கருவூலச்சீட்டு ரசீது, சரிபார்க்க வேண்டிய மதிப்பெண் சான்றிதழ்கள் குறித்த பட்டியலை, தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பினால், தேர்வுத்துறை இயக்குனரகத்தில் நிறுவப்படும் சாதனம் மூலம், சம்பந்தபட்ட கல்வி நிறுவனம், குறிப்பிட்ட சான்றிதழ்களை, தேர்வுத்துறை இணையதளம் வழியாக சரிபார்த்துக் கொள்ள, அனுமதி வழங்கப்படும்.

இதன்பின், சம்பந்தபட்ட உயர்கல்வி நிறுவனங்கள், சான்றிதழ்களை சரிபார்த்து, வேறுபாடுகள் நிறைந்த சான்றிதழ்கள் இருந்தால், அதை நகல் எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும். மாறுபட்ட விவரங்கள் கொண்ட சான்றிதழ்களை, சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெற்று, தேர்வுத்துறை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.

இந்த முறையால், உயர்கல்வி நிறுவனங்கள் மட்டும் இல்லாமல், அரசுத் துறைகள், தங்களிடம் சேரும் பணியாளர்களின் சான்றிதழ்களையும், ஆன்-லைன் வழியாக, உடனுக்குடன், சரிபார்த்துக் கொள்ள முடியும். இதற்காக, ஆண்டுக்கணக்கில், காத்திருக்க தேவையில்லை. முக்கியமாக, போலி சான்றிதழ்கள் ஊடுருவலை, முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும் என்றும் தேர்வுத்துறை நம்புகிறது.

திட்டம் அமலுக்கு வந்தபின், அதை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல் பணியை மேற்கொள்ளும் பொறுப்பை, யார் ஏற்பது என்பதில், மூன்று துறையினரிடையே, பிரச்னை நிலவி வருவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


வாசகர் கருத்து

மிக்க நன்றி நாங்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியாக இருகிறோம் வணக்கம்
by ayyappan,India    27-டிச-2012 13:03:20 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us