மாணவரே இல்லாத அரசு பள்ளி: கண்டுகொள்ளாத கல்வித்துறைடிசம்பர் 24,2012,08:38 IST
எழுத்தின் அளவு :

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் அருகே, மேட்டுகற்களத்தூர் ஒன்றிய துவக்கப் பள்ளி, ஒரு மாதமாக, மாணவர்கள் இல்லாமல் செயல்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்வித்துறை கண்டும் காணாமல் இருப்பதாக கல்வியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம், ஏ.ஆர்.மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்த பள்ளிக்கு, நடப்பாண்டு துவக்கத்தில், மூன்று, ஐந்தாம் வகுப்பில், தலா ஒரு மாணவி வீதம், இருவர் மட்டுமே வந்தனர். இவர்களும் வேறு பள்ளியில் சேர்ந்து விட்டதால், ஒரு மாதத்திற்கும் மேலாக, மாணவர்களின்றி இப்பள்ளி செயல்படுகிறது.
தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் மட்டும், தினமும் பள்ளி வந்து செல்கின்றனர். தலைமை ஆசிரியர் ராசு கூறியதாவது: இந்த ஊரில், 50 குடும்பங்கள் உள்ளன. துவக்கப் பள்ளிக்கு ஏற்ற வயதில், இந்த ஊரில், குழந்தைகள் இல்லை.
மாணவர் சேர்க்கைக்காக கூட்டம் நடத்தினோம். வெளியூரில் இருந்து குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுப்பதாக, ஊர் மக்கள் கூறினர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட, தொடக்கக் கல்வி அலுவலர், ஈவிலிங் சுகுணா கூறுகையில், "விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றார்.