கல்வி நிறுவனங்கள் என்பவை, வெறும் வகுப்பறை மற்றும் பாடம் சார்ந்த அம்சங்களை மட்டுமே கொண்டதல்ல. ஒரு கல்வி சாலையில் பயிலும் மாணவர்களுக்கு, அதை தாண்டிய வேறுபல அனுபவங்களும் முக்கியம்.
ஒரு கல்வி நிறுவனம் எந்த சூழலில் அமைந்துள்ளது, அதன் உள்கட்டுமானம் எப்படியானது என்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய சூழலே, ஒரு நல்ல மாணவர் சமூகத்தை உருவாக்க வல்லது.
ஏதேனும் ஒரு சிறந்த வெளிநாட்டுப் பல்கலையில் படிக்க வேண்டுமென்ற ஆசை பலருக்கும் உண்டு. அழகிய சூழலில் அமைந்த, நல்ல கட்டடக்கலை அம்சத்தைக் கொண்ட சில வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களைப் பற்றிய சிறிய விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
பீகிங் பல்கலைக்கழகம், சீனா
இப்பல்கலை, கடந்த 1898ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் வளாகம், சீன தலைநகர் பீஜீங்கிலுள்ள urban haidian district -ல் அமைந்துள்ளது.
9 பிரதான சீன பல்கலைக்கழகங்கள் உறுப்பினராக இருக்கும் C9 League என்ற அமைப்பில் ஒரு உறுப்பினராக இருக்கிறது இப்பல்கலை. இக்கல்வி நிறுவனம், இதன் சிறப்பான அகடமிக் செயல்பாடுகளுக்காக மட்டும் விரும்பப்படுவதில்லை.
மாறாக, இதன் பசுமை மற்றும் எழில் நிறைந்த வளாகச் சூழல், தோட்டங்கள், குளங்கள், பாரம்பரிய சீன பாணியிலான கட்டடக்கலை ஆகியவற்றுக்காகவும் மிகவும் விரும்பப்படுகிறது.
இப்பல்கலை வளாகத்தின் பரப்பளவு, மொத்தம் 675 ஏக்கர்கள். அதில் 30க்கும் மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 12 துறைகள் உள்ளன.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
உலகின் பழமையான பல்கலைகளுள் ஒன்றாக இது விளங்குகிறது. இப்பல்கலை, 30க்கும் மேற்பட்ட உறுப்புக் கல்லூரிகளைக் கொண்டுள்ளது.
நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பயன்படுத்தப்படும் The Sheldonian Theatre, கிறைஸ்ட் சர்ச் கதீட்ரல், வித்தியாசமான மரம், செடிகளைக் கொண்ட அழகியத் தோட்டம் ஆகியவற்றுக்காக, இப்பல்கலை வளாகம், உலகளவில் புகழ்பெற்று திகழ்கிறது.
மேலும், இப்பல்கலை, கண்ணாடி கல் ஜன்னல்கள் மற்றும் கல் தொடர்பான கட்டடக்கலை ஆகியவற்றுக்கும் புகழ்பெற்று விளங்குகிறது.
ஸ்கிரிப்ஸ் கல்லூரி, அமெரிக்கா
கடந்த 1920களில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைக்கப்பட்ட இக்கல்லூரி, பலரையும் இதன்பால் கவர்வதற்கு முக்கிய காரணம், அதன் கட்டடக் கலைதான். புத்துயிரூட்டப்பட்ட மத்திய தரைக்கடல் பாணி கட்டடக்கலைதான் அதன் சிறப்பு.
அழகான பசுமை, இரண்டு - மூன்றடுக்கு கட்டுமானங்கள், அலங்கரிக்கப்பட்ட சுவர்கள், சிவப்புக் கல் கூரைகள், இரும்பு பால்கனிகள் மற்றும் சிறப்பான ஜன்னல்கள் மற்றும் கதவுகள் ஆகியவை இக்கல்லூரியின் சிறப்பு.
மகளிர் கல்லூரியான இக்கல்லூரி, அகடமிக் செயல்பாட்டிலும் சிறந்து விளங்குகிறது. இங்கே வழங்கப்படும் interdisciplinary humanities படிப்பு, மாணவர்களின் பகுப்பாய்வு சிந்தனையைத் தூண்டுகிறது.
போலோக்னா பல்கலைக்கழகம், இத்தாலி
கலை மற்றும் கலாச்சாரத் துறையில், சிறந்த ஆர்வமுள்ள மாணவர்களுக்கான ஒரு பொருத்தமான இடம், போலோக்னா பல்கலைக்கழகம்.
இப்பல்கலையின் கட்டடக் கலையில் ஒருவர் மயங்காமல் இருப்பது மிகவும் கடினமே. கல் வேலைபாடு கொண்ட சாலைகள், சிவப்புக் கல் கட்டுமானங்கள் போன்றவை அழகு வாய்ந்தவை. மேலும், புத்தகப் பிரியர்களுக்கு, இப்பல்கலை வளாகம் ஒரு சொர்க்கம் போன்றது. இதன் நூலகத்தில் மொத்தம் 7 லட்சம் புத்தகங்கள் உள்ளன.
ஐரோப்பாவின் முதல் பல்கலைக்கழகமாக திகழும் இக்கல்வி நிறுவனம், வடக்கு இத்தாலியில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் அருமையான, அற்புதமான தாவரங்கள் மற்றும் மலர்கள், இதை நோக்கி மக்களை ஈர்க்கின்றன.
கேப்டவுன் பல்கலைக்கழகம், தென்ஆப்ரிக்கா
கடந்த 1829ம் ஆண்டு இப்பல்கலை தொடங்கப்பட்டது. தென்ஆப்ரிக்காவின் மேற்கு மலைப் பிராந்தியத்தில் இக்கல்வி நிறுவனம் அமைந்துள்ளது.
இப்பல்கலை, 2 நகர்ப்புற வளாகத்தையும், 4 புறநகர் வளாகத்தையும் கொண்டது. தென்ஆப்ரிக்காவின் பழைய பல்கலையாக, இந்த பொது ஆராய்ச்சி பல்கலை திகழ்கிறது. டெவில் சிகரம் எனும் மலையின் சரிவில் அமைந்துள்ளது இப்பல்கலை. எனவே, இதன் சுற்றுப்புற அழகு எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்த்துக் கொள்ளலாம்.
இங்கே, படிக்கும் மாணவர்களுக்கு, தினந்தோறும் இயற்கை விருந்துதான். மலை பைக்கிங் மற்றும் ஸ்கையிங் போன்ற வாய்ப்புகளும் மாணவர்களுக்கு கிடைக்கின்றன. இப்பல்கலை, அகடமிக் செயல்பாட்டிலும் சிறந்து விளங்குகிறது.
Universidad Nacional Autonoma de Mexico, மெக்சிகோ
UNAM என்றும் அழைக்கப்படும் இப்பல்கலை, 20ம் நூற்றாண்டின் நவீன கட்டடக் கலைக்கு பெயர்பெற்றது.
இதன் சிறப்பம்சம் என்னவெனில், 2.8 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள இதன் நகர்ப்புற வளாகம், இப்பல்கலையின் கலை, கட்டடக்கலை மற்றும் பொறியியல் மாணவர்களால் இணைந்து கட்டப்பட்டது என்பதுதான்.
இப்பல்கலையின் ஒரு முக்கிய அம்சம் என்னவெனில், மத்திய நூலகத்தின் சுவர் அலங்காரங்கள், மெக்சிகோ நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்து சேகரித்து கொண்டுவரப்பட்ட டைல்ஸ்களால் மேற்கொள்ளப்பட்டதாகும்.