38 ஆண்டுக்கு பின் தலித் மாணவர்கள் கல்விநிலை குறித்து ஆய்வுடிசம்பர் 04,2012,09:23 IST
சென்னை: தலித் மாணவர்கள் கல்வி நிலை குறித்த ஆய்வு, 38 ஆண்டுகளுக்குப் பின், நாடு முழுவதும் மீண்டும் நடத்தப்படுகிறது. தமிழகத்தில், சென்னை பல்கலைக்கழகம், இந்த ஆய்வை மேற்கொள்கிறது.
இந்திய அளவில் உள்ள, தலித் மாணவர்களின் கல்வி நிலை குறித்த ஆய்வை, மத்திய அரசின், இந்திய சமூக அறிவியல் ஆய்வு குழு மேற்கொள்கிறது. தலித் பிரிவினர் அதிகளவில் உள்ள, அரியானா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட, 15 மாநிலங்களில் உள்ள, பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம், இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
தமிழக அளவிலான ஆய்வை, சென்னை பல்கலைக்கழக, பொருளியல் துறை மேற்கொள்கிறது. இரண்டாண்டு கால ஆய்வுக்கு, 40 லட்ச ரூபாய் நிதியை, மத்திய அரசு வழங்கியுள்ளது. ஒதுக்கப்பட்ட மக்கள் கல்வி பெறுவதில் உள்ள சிக்கல்கள், கல்வி மூலம் தலித் மக்களின் வாழ்க்கை ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தலித் மக்களுக்கு கல்வி பரவலாக்க உள்ள தடைகள், தலித் மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் கல்வி பெறுவதில் உள்ள முரண்பாடுகள் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இதுகுறித்து, சென்னை பல்கலைக்கழக பொருளியல் துறை தலைவர் தங்கராஜ் கூறியதாவது: தலித் மாணவர்களின் கல்வி நிலை குறித்து, 1974-75ம் ஆண்டு மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவை அடிப்படையாக வைத்து, தலித் மாணவர்களுக்கு முழுமையாக கல்வி சேரவும், மாணவர்களின் கல்வி நிலையை உயர்வதற்கும் பல்வேறு திட்டங்களை அரசு வகுத்தது.
தற்போது, 38 ஆண்டுகள் கழிந்து மறுபடியும், 2012-13ம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வின் முடிவை அடிப்படையாக வைத்து, தற்போது, மாணவர்கள் கல்வி பெற உள்ள, தடைகளை அகற்றவும், அவர்களுக்கு, கல்வி சென்று சேரவும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
எங்கள் ஆய்வில், அரசு கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கும், தனியார் கல்வி நிறுவனத்தில் படிப்பதற்கும் உள்ள வேறுபாடுகள், தலித் மாணவர்கள் விடுதியில் சந்திக்கும் பிரச்னைகள், கல்வி நிலையங்களில் மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், கிராமப்புற கல்வி, நகர்ப்புற கல்வி ஒப்பீடு, துவக்கக் கல்வி முதல் கல்லூரி கல்வி வரை பெறும் மாணவர்களின் கல்வி நிலை உள்ளிட்டவற்றை, ஆராய உள்ளோம்.
இதன் முழு முடிவும், 2014ல் வெளியாகும். முடிவை வைத்து, தலித் மாணவர்களின் கல்வி பெற உள்ள தடைகளை அகற்றி, கல்வி பரவலாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். இவ்வாறு தங்கராஜ் கூறினார்.