தனியார் மெட்ரிக் பள்ளிகள் நடத்தும் வசூல் வேட்டை | Kalvimalar - News

தனியார் மெட்ரிக் பள்ளிகள் நடத்தும் வசூல் வேட்டைடிசம்பர் 04,2012,09:26 IST

எழுத்தின் அளவு :

சென்னை: முன்னணியில் உள்ள, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, இப்போதே மும்முரமாக நடந்து வருகிறது. கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, மே மாதம் தான், சேர்க்கைப் பணிகளை துவங்க வேண்டும்.

இதை மீறி, லட்சக்கணக்கில் நன்கொடை தருபவர்களுக்கு, எந்த கேள்வியும் கேட்காமல், சீட் வழங்கப்படுகின்றன. நடவடிக்கை எடுக்க வேண்டிய, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் வேடிக்கை பார்த்து வருகிறது.

தமிழகத்தில், 4,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், முன்னணியில் உள்ள, 100க்கும் அதிகமான மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், 2013-14ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, இப்போதே, மும்முரமாக நடந்து வருகிறது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தில், மே மாதம் தான், மாணவர் சேர்க்கைப் பணிகளை துவங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி, மாநிலம் முழுவதும், மெட்ரிக் பள்ளி அதிகாரிகள், விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டனர்.

"மே மாதம் தான், மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். முன்கூட்டி சேர்க்கை நடத்தினால், அந்த சேர்க்கை ரத்து செய்வதுடன், சம்பந்தபட்ட பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் எச்சரிக்கையை மீறியும், சட்டத்திற்கு எதிராகவும், முன்னணி தனியார் பள்ளிகளில், இப்போதே மாணவர் சேர்க்கை, தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னையில், எல்.கே.ஜி., விண்ணப்பங்களை வாங்க, பெற்றோர், கால்கடுக்க, பல மணிநேரம் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது. பெற்றோர்களின் ஆர்வத்தைக் காசாக்கும் முயற்சியில், பள்ளி நிர்வாகங்கள் இறங்கி உள்ளன.

சென்னை, சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், எல்.கே.ஜி., சீட் வாங்க, பல லட்சம் ரூபாய் செலவில், விளையாட்டு அரங்கம் கட்டித்தர, ஒரு பெற்றோர் முன்வந்த சம்பவமும், சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இதேபோல், பல பள்ளி நிர்வாகங்கள், பல லட்சம் ரூபாயை, நன்கொடையாக கறக்கவும் தவறுவதில்லை.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரக வட்டாரத்தினர் கூறியதாவது: பள்ளி நிர்வாகங்கள், நன்கொடை கேட்பதாக, பெற்றோர் தரப்பில் இருந்து, எழுத்துப்பூர்வமாக, எவ்வித புகாரும் வரவில்லை. புகார்கள் வந்தால், விசாரணை நடத்தி, சம்பந்தபட்ட பள்ளிகள் மீது, நடவடிக்கை எடுப்போம்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை, இப்போது நடத்தக்கூடாது. மே மாதம் தான் நடத்த வேண்டும். சில பள்ளிகள், மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக, செய்திகள் வருகின்றன. விசாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, துறை வட்டாரத்தினர் கூறினர்.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்க பொதுச்செயலர், நந்தகுமார் கூறியதாவது: பெரிய பள்ளிகள், அரசையும் மதிப்பதில்லை; சட்டத்தையும், அதிகாரிகளையும் மதிப்பதில்லை. அவர்கள், தங்களுக்கு என, தனி சட்டம் வைத்துக்கொண்டு செயல்படுகின்றனர்.

இதுபோன்ற, பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகள் தயங்குகின்றனர். சாதாரண பள்ளிகளில் தான், அவர்களது வேகத்தை காட்டுகின்றனர். சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும், முன்கூட்டி சேர்க்கை நடக்கிறது. இந்த பள்ளிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம், மாநில அரசிடம் தான் உள்ளது. இந்தப் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, நந்தகுமார் கூறினார்.


வாசகர் கருத்து

government கூட கறக்கத்தான் கட்டுப்பாடு விதிக்குது ,
by ராஜா,India    19-டிச-2012 14:51:57 IST
அரசாங்க பள்ளிகள் மற்றும் அரசாங்க உதவி பெரும் பள்ளிகளில் சேர்க்காமல் ஏன் போகவேண்டும் இங்கேயும் tuition வைத்து அதற்கும் பணம்
by raam,United States    05-டிச-2012 02:10:52 IST
அரசாங்க பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆவன செய்யுங்கள், அதை விட்டு தன் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு சில பிரைவேட் ஸ்கூல் உண்டு அதனால் பெற்றோர்கள் இப்படி செய்கிறார்கள், இதில் இருவருக்கும் லாபம் இல்லாமல் இல்லை
by bal,France    04-டிச-2012 15:55:42 IST
பெற்றோர்கள் யாரும் எழுத்து மூலமாக புகார் தரமாட்டார்கள். காரணம் விஷயம் தெரிந்தால் பள்ளி நிர்வாகம் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தில் விளையாடி விடுவார்கள் என்ற பயம்தான். இதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் பள்ளி நிர்வாகம் எதற்கும் பயப்படாமல் இப்படியெல்லாம் செய்கிறார்கள். வாங்குகிற தொகைக்கு எந்தப் பள்ளி நிர்வாகம் ரசீது கொடுக்கிறது? கொடுத்தால் தங்கள் குட்டு வெளியாகிவிடுமே என்ற பயத்தால்தான். இதை அரசால் ஒன்றும் செய்ய முடியாது. "திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்கவேண்டிய கூட்டம் (சும்மா) பார்த்துக்கொண்டே இருக்கிறது". காரணம் அரசுக்கே தெரியும்..
by Robinson,India    04-டிச-2012 15:06:47 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us