காரைக்குடி: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பன்னாட்டு பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என தமிழக அனைத்து பல்கலை அலுவலர் சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
காரைக்குடியில் நடைபெற்ற தமிழக அனைத்து பல்கலை அலுவலர் சங்க கூட்டமைப்பின் கூட்டத்தில், காரைக்குடி அழகப்பா பல்கலை அலுவலர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் அவர் பேசுகையில், பல்கலை சிண்டிகேட், செனட் அமைப்புகளில் அலுவலர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். அனைத்து அலுவலர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பல்கலை அலுவலர்களுக்கு, ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி, மாநில அரசு நிதி ஆதாரத்தை, பல்கலைகளுக்கு அதிகப்படுத்த வேண்டும்.
அனைத்து பல்கலைகளிலும், பன்னாட்டு தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் போட்டி தேர்வுகளுக்கான, பயிற்சி மையம், அனைத்து பல்கலைகளிலும் துவங்க வேண்டும். இந்த கோரிக்கைகள், விரைவில் நடக்க உள்ள மாநாட்டில் வலியுறுத்தப்படும் என்றார்.