மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பாபாசி) சார்பில் நடைபெறும் புத்தக கண்காட்சியில், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பும், லட்சக்கணக்கான புத்தங்கள் இடம் பெற்றுள்ளன.
212 ஸ்டால்களில், ஒரு லட்சம் தலைப்புகளில், 30 லட்சம் புத்தங்களை ஒரே இடத்தில் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இக்கண்காட்சியில் தினமும், பல பதிப்பகங்கள் சார்பில் புத்தகங்கள் வெளியிட்டு, அறிமுகப்படுத்தப்படுகிறது. அனைத்து ஸ்டால்களிலும் புத்தகங்களுக்கு தள்ளுபடி உண்டு. அதிலும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகைகள் உண்டு. மல்டிமீடியா ஸ்டால்கள் இந்த ஆண்டு அதிகம் இடம் பெற்றுள்ளன. 10ம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்களுக்கான பாடபுத்தங்கள் சி.டி., வடிவம் பெற்றுள்ளன.
இதில் புதுமையாக 2டி, 3டி அனிமேஷன் வடிவில் உள்ளன. 2 ரூபாய் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான புத்தங்களும், 2 முதல் 14 வயது வரை உள்ள மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும், "சிடி", புத்தகங்கள், கதைகள் அடங்கிய "பேக்கேஜ்" ரூ.30 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையிலும் வாங்கலாம். குட்டீஸ்களை குதூகலிக்க வைக்கும் பிரமாண்ட கலரிங் புத்தகம், மேஜிக் புத்தகங்கள் இந்த ஆண்டு புதுவரவாக அனைவரையும் கவர்கிறது.
நவீன எழுத்தாளர்களின் படைப்புகள், சாகித்ய அகாடமி விருது பெற்ற புத்தகங்கள், இளம் எழுத்தாளர்களின் வசீகரிக்கும் படங்களுடன் உள்ள புத்தங்களுடன், ஆன்மிகம், சமையல், வரலாறு, இலக்கியம், ஜோக்ஸ், காமிக்ஸ், நாவல்கள், கவிதைகள் என அனைத்து வகை வகையான புத்தகங்களால் நம் வீட்டையும், மனதையும் அலங்கரிக்க இந்த புத்தக கண்காட்சி ஒரு அரிய வாய்ப்பு.
இத்திருவிழா செப்., 9 வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. தினமும் மாலை கலை நிகழ்ச்சிகள், சிந்தனைக்குரிய கருத்தரங்கங்களாய், களை கட்டியுள்ள இத்திருவிழாவில், நாம் பங்கேற்பது என்பது நம் அடுத்த தலைமுறைக்கான அறிவு சேமிப்பு. இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில், கன்னியாகுமரி கலெக்டர் நாகராஜன், முனைவர் அறிவொளி, கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம் பங்கேற்கின்றனர்.