காரைக்குடி: மின்வெட்டு காரணமாக, மாலை நேர பொறியியல் கல்லூரிகளில் மூன்று மணி நேரத்துக்கு பதில் ஒரு மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக அதில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குறியாகி உள்ளது.
அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும், பொறியியல் கல்லூரிகளில், மாலை நேரங்களில், பகுதி நேர கல்லூரிகள் செயல்படுகிறது. டிப்ளமோ முடித்த பட்டதாரிகள் இதில் சேர்ந்து, பி.இ., பி.டெக்., படிக்கலாம். மாலை 6.15 முதல், இரவு 9.15 மணி வரை வகுப்புகள் நடக்கும். வாரத்தின் ஏழு நாட்களும், வகுப்புகள் நடத்தப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் பகலில் வகுப்புகள் நடத்திக் கொள்ளலாம். 3 மணிநேரம் பாடம் நடத்த வேண்டிய நிலையில், மின்தடையால், ஒரு மணிநேரம் மட்டுமே வகுப்புகள் நடக்கின்றன. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதேபோல் பாலிடெக்னிக் மாணவர்கள் மாலை நேர கல்லூரிகளும் ஒரு மணி நேரம் மட்டுமே, வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இன்ஜி., கல்லூரிகளில் ஜெனரேட்டர் வசதியிருந்தும், மாலை நேர கல்லூரிகளுக்காக அவற்றை இயக்க, கல்லூரி நிர்வாகங்கள் முன்வருவதில்லை.
இதனால் ஆசிரியர்கள் வேறு வழியின்றி ஒரு மணி நேரத்தில் பாடத்தை முடித்து மாணவர்களை அனுப்பி விடுகின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளதாக பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
கல்லூரி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜெனரேட்டருக்கு, ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. தற்போதைய கரன்ட் கட் பிரச்னையால், அடிக்கடி ஜெனரேட்டரை பயன்படுத்துவதால், இந்த தொகை போதவில்லை. இதனால் தேர்வுத்துறை, மற்ற துறைகளின் நிதி மூலம் சமாளித்து வருகிறோம்.
மாலை நேர கல்லூரிகளுக்கு, சிறிய அளவிலான ஜெனரேட்டர் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. ஏதாவது ரிப்பேர் ஆகியிருக்கும், அதனால் வகுப்புகள் சீக்கிரம் முடிக்கப்பட்டிருக்கும். விரைவில் சரி செய்யப்படும் என்றார்.