கோவை: கோவை, பாரதியார் பல்கலை துணைவேந்தர் சுவாமிநாதன், நேற்று பணி ஓய்வு பெற்றார். இந்திய செஞ்சிலுவை கூட்டமைப்பு சார்பில், சிறந்த துணைவேந்தர் விருது சுவாமிநாதனுக்கு இன்று வழங்கப்படுகிறது.
துணைவேந்தர் சுவாமிநாதனின் பதவிக்காலம், நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய துணைவேந்தர் பதவியேற்கும் வரை, இடைப்பட்ட காலத்தில், தேர்வு செய்யப்பட்ட சிண்டிகேட் குழுவினர், இப்பதவியை வகிப்பது வழக்கம்.
சிண்டிகேட் தேர்வுக் குழுவினரை நியமிக்கும் அதிகாரம் சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டதை அடுத்து, ஐந்து பேர் கொண்ட குழுவினரை நியமித்துள்ளார். புதிய துணைவேந்தர் பதவியேற்கும் வரை, இக்குழுவினர், துணைவேந்தர் பணிகளை மேற்கொள்வர்.
இதனிடையே, பாரதியார் பல்கலைக்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவில், சிண்டிகேட் சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சோனை, செனட் சார்பில், கம்பன் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர் சரவணகுமார், தமிழக அரசு சார்பில், காரைக்குடி அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் கன்னியப்பன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய செஞ்சிலுவை கூட்டமைப்பு சார்பில், சிறந்த துணைவேந்தர் விருது, சுவாமிநாதனுக்கு வழங்கப்படுகிறது. சென்னை, எழும்பூர் பகுதியிலுள்ள, தமிழ்நாடு செஞ்சிலுவை கூட்டமைப்பு வளாகத்தில், இன்று நடக்கும், 63வது ஜெனிவா கன்வென்சன்ஸ் தின நிகழ்ச்சியில், தமிழ்நாடு டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நடராஜ் இவ்விருதை, சுவாமிநாதனுக்கு வழங்குகிறார்.