புதுடில்லி: தனியார் பள்ளியில், ஏழை மாணவர்களின் முடியை வெட்டி எறிந்த சம்பவம் குறித்து, அறிக்கை அளிக்க, கர்நாடக மாநில தலைமை செயலருக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், கல்வி பயில வசதியாக, ஒவ்வொரு பள்ளியிலும் ஏழை குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், தனியார் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட, நான்கு மாணவர்களது முடியை வெட்டி எறிந்து, அவர்களை பிற மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்ட, பள்ளி நிர்வாகம் முயன்றுள்ளது.
இந்த சம்பவம் அனைத்து மாணவர்களும், பள்ளி வளாகத்தில் காலை பிரார்த்தனைக்காக கூடியிருந்தபோது நடந்துள்ளது. மேலும், அந்த நான்கு மாணவர்களது உணவு பெட்டிகளையும் திறந்து பரிசோதித்துள்ளனர். இது தவிர, அம்மாணவர்களது பெயர்கள் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யாமல், அவர்களை வகுப்பில் தனியிடத்தில் அமர்த்தியுள்ளனர். அவர்களுக்கு மட்டும், ஹோம் ஒர்க் அளிக்காமல் இருந்துள்ளனர்.
இதுகுறித்து, அந்த மாணவர்களது பெற்றோர் அளித்த புகாரின்படி, தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுகுறித்து, நான்கு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு, கர்நாடக மாநில தலைமை செயலருக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.