சென்னை: தமிழகத்தில், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்படும் என கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்தார்.
தமிழகத்தில், 62 அரசு கல்லூரிகள் உள்ளன. இதில், 35 கல்லூரிகளில் மட்டுமே முதல்வர்கள் உள்ளனர். மீதியுள்ள, 27 அரசு கல்லூரிகளில், பொறுப்பு முதல்வர்கள் உள்ளனர். இதேபோல, ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளிலும் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
சென்னை, கோவை, வேலூர், திருச்சி, நெல்லை, மதுரை உள்ளிட்ட ஆறு கல்லூரி கல்வி மண்டலங்களில், கோவை மண்டலத்தில் மட்டும், இணை இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற மண்டலங்களில், இணை இயக்குனர் பதவி காலியாக உள்ளது. சென்னையில் மட்டும் மூன்று இணை இயக்குனர் பணியிடங்களும் காலியாக உள்ளன.
தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறுகையில், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள, 27 முதல்நிலை கல்லூரி முதல்வர் பணி இடங்களில், 19 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏழு கல்லூரி கல்வி இணை இயக்குனர் பணியிடங்களில், ஆறு பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்காக ஆணை ஓரிரு நாளில் வெளியாகும் என்றார்.