கோவையில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் சோதனை | Kalvimalar - News

கோவையில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் சோதனைஜூலை 30,2012,09:27 IST

எழுத்தின் அளவு :

கோவை: சென்னை பள்ளி மாணவி, பஸ் துவாரத்தில் விழுந்து பலியானதை தொடர்ந்து, கோவையில் பள்ளி, கல்லூரி வாகன சோதனைகளை முடுக்கி விட்டுள்ளனர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள். விடுமுறை நாளான நேற்று நடந்த சோதனையில், குறைபாடுள்ள, 20 வாகனங்களுக்கு, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த, 26ம் தேதி முதல், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், பள்ளி வாகனங்களை சோதனையிட்டு வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமையான நேற்றும், அதிகாரிகளின் ஆய்வு தொடர்ந்தது. ஆவாரம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்துக்கு வரவழைக்கப்பட்ட, கல்லூரி வாகனங்களில், வட்டாரப் போக்குவரத்து துணை ஆணையர் உதயணன் தலைமையில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

750 வாகனங்கள் ஆய்வுக்குப் பின், துணை ஆணையர் உதயணன் கூறியதாவது: கடந்த 26ம் தேதி முதல் இன்று (நேற்று) வரை மொத்தம், 750 வாகனங்களில் சோதனை நடந்தது. வாகனங்களில் ஜன்னல் கம்பிகள் நல்ல நிலையில் உள்ளதா, முதலுதவிப் பெட்டிகள் உள்ளதா, தீயணைப்பு சாதனம் உள்ளதா, அவசரகால வழி உள்ளதா, கதவுகள் உடனடியாக திறக்கும் நிலையில் வசதியாக உள்ளதா, பிரேக் நல்ல நிலையில் உள்ளதா என்பன உட்பட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவற்றில், சில வசதிகள் இல்லாத, 20 வாகனங்களுக்கு, நோட்டீஸ் வழங்கி உள்ளோம். வரும் 31க்குள் குறைகளை நிவர்த்தி செய்ய, உத்தரவிட்டுள்ளோம். ஆட்டோவில் 5 பேர் டீசல் ஆட்டோ உட்பட அனைத்து ஆட்டோக்களிலும் இனி அதிகபட்சமாக, ஐந்து குழந்தைகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும். டிரைவர் சீட்டில் குழந்தைகளை அமர வைக்கக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறும் ஆட்டோக்களின் பெர்மிட் ரத்து செய்யப்படும். அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்லும், ஷேர் ஆட்டோக்களையும் கண்காணித்து வருகிறோம்.

அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் உள்ள குறைகளையும், ஆய்வு செய்து வருகிறோம். இந்த சோதனை, இனி தினமும் தொடரும். பள்ளி வாகனங்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய, ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உதயணன் தெரிவித்தார்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us