சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி ஆசிரியருக்கான கலந்தாய்வு நடப்பதற்கு முன்பே, பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது என, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் குற்றம்சாட்டியுள்ளது.
கல்லூரி ஆசிரியருக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, ஆகஸ்ட் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில், சென்னை, ராணி மேரி மகளிர் கல்லூரியில் நடக்கிறது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்ட நிலையில், கலந்தாய்வுக்கு முன்னதாகவே, பணியிட மாறுதல் நடப்பதாகக் கூறி, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தினர், சென்னையில் நேற்று, ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
சங்கப் பொதுச் செயலர் பிரதாபன் கூறும்போது, கலந்தாய்வு துவங்காத நிலையில், பணியிட மாறுதல் நடந்து வருகிறது. முறையான, வெளிப்படையான கலந்தாய்வை நடத்த வேண்டும். கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் பணியிடங்களையும், காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களையும் நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கிறோம் என்றார்.