திண்டுக்கல்: தனியார் பள்ளிகளின் முதல்வர்கள், தாளாளர்கள், டிரைவர்களை அழைத்து விபத்து இல்லாமல் பஸ்களை இயக்குவது குறித்து கூட்டம் நடத்த வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகள் பள்ளி பஸ் விபத்தில் இறப்பது தொடர்கிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, பள்ளி பஸ்கள் தரமானதாக இருக்க வேண்டும். பழுது ஏற்பட்டால் அவற்றை பள்ளி நிர்வாகத்திற்கு எடுத்து சொல்ல வேண்டும்.
10 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த டிரைவர்களை பணியில் வைத்து கொள்ள வேண்டும். குழந்தைகள் விபத்தில் இறப்பதை தடுக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள், பள்ளி முதல்வர், தாளாளர், பஸ்டிரைவர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்.
இக்கூட்டத்தில் விபத்து இல்லாமல் வாகனங்களை இயக்குவது, வாகனங்களில் பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிப்பது, தினமும் பஸ்களை கண்காணித்து அறிக்கை தருவது போன்ற அறிவுரை வழங்க வேண்டும்.
பள்ளி நிர்வாகமும், பஸ் டிரைவர்களும் தினமும் பேச வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவற்றை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.