சென்னை: மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில், ஏழு எம்.பி.பி.எஸ்., இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
தமிழகத்தில் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,853; தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 838 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான, மாணவர் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முடிந்தது. கலந்தாய்வின் முடிவில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எஸ்.டி., பிரிவில் மட்டும் ஏழு எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக் குழு செயலர் சுகுமார் கூறியதாவது: தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ்., இடங்களுக்கான கலந்தாய்வு, வரும் 23ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடக்கிறது. அதன் முடிவில், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் ஒப்படைக்கப்படும் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் உட்பட, காலியாக உள்ள இடங்களுக்கு, செப்டம்பர் மூன்றாம் வாரத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும். இதற்கான காத்திருப்போர் பட்டியல், இம்மாத இறுதியில் வெளியிடப்படும். இவ்வாறு சுகுமார் கூறினார்.