சென்னை: எம்.பி.பி.எஸ்., படிப்பில், கட்-ஆப் மதிப்பெண் 200க்கு 200 பெற்ற, 16 பேரில், 15 பேர், சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளனர். ஒரே ஒரு மாணவன் மட்டும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தார்.
புதிதாக துவங்கப்பட்டுள்ள சிவகங்கை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள, 1,823 எம்.பி.பி.எஸ்., இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள, 85 பி.டி.எஸ்., இடங்களை நிரப்புவதற்கான, முதல்கட்ட கலந்தாய்வு, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் துவங்கியது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில், சிறப்பு பிரிவினரான, விளையாட்டு வீரர்களுக்கு, மூன்று இடங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 54 இடங்கள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு, மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறப்பு பிரிவைச் சேர்ந்த இவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் நிரப்பப்பட்ட இடங்கள் குறித்த விவரங்கள், இணையத்தில் வெளியிடப்படும். இன்று முதல் வரும் 16ம் தேதி வரை, பொது பிரிவினருக்கான கலந்தாய்வும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு, இம்மாத இறுதியிலும் கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலர் சுகுமார் கூறினார்.
எம்.பி.பி.எஸ்., படிப்பில், கட்-ஆப் மதிப்பெண் 200க்கு 200 பெற்ற, கவுதம், சுஷ்மிதா, ஆசிஷ் ராஜேஷ், ஜெகன்நாதன், பெர்மியோ, சரண்குமார், பிரவீன், மகேஸ்வரி, ஷைனி பிரியா, சுந்தர் ராம், அருண் பாலாஜி, ஹரிகரன், திவாகர், பிரேம் சந்தர், மமிதா, சதீஷ்குமார் ஆகிய 16 பேரில், பெர்மியோ மட்டும், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்தார். மற்ற 15 பேரும், சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர விருப்பம் தெரிவித்தனர்.
கலந்தாய்வை துவக்கி வைத்து, இவர்களுக்கான ஒதுக்கீடு கடிதத்தை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் வழங்கினார்.