சென்னை: அண்ணா பல்கலை கல்லூரியில் நடந்த தேர்வு முறைகேடு குறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே நடந்து வந்த தேர்வு முறைகேடுகள், இப்போது அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லூரியிலும் நடந்திருப்பது, பல்கலை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறு மதிப்பீடு திட்டத்தின் மூலம், உயர் அதிகாரத்தில் உள்ளவர்களின் பிள்ளைகளுக்கு, தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களை வாரி வழங்கிய விவகாரத்தில், தமிழக அரசு மவுனம் சாதிக்கிறது. அண்ணா பல்கலையில், "ரேண்டம் எண்&' ஒதுக்கீடு நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், தேர்வு முறைகேடு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்தார்.
தேர்வு முறைகேடு குறித்து எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து, அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், பல்கலை வட்டாரங்கள் கூறும்போது, தனி குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என, ஒற்றை வரியில் முடித்துக் கொண்டன.
இதுபோன்ற விசாரணைக் குழுவை அமைத்தால், அது கண்துடைப்பாகவே அமையும்; தவறு செய்தவர் மீதோ, முறைகேட்டினால் பலன் அடைந்த மாணவர் மீதோ, எவ்வித நடவடிக்கையும் இருக்காது. இந்த முறைகேடு தொடர்பான முழு விவரங்களும் வெளியே வர வேண்டுமெனில், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, பல்கலை பேராசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.