சென்னை: ஏரோ நாட்டிகல் துறையில் ஆர்வம் உள்ள பள்ளி மாணவர்கள் 40 பேருக்கு, "ஏரோ மாடலிங்" குறித்து, மதுரையைச் சேர்ந்த பாரத் நிறுவனம், மூன்று நாள் பயிற்சி அளித்து வருகிறது.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சார்பில், பிர்லா கோளரங்க வளாகத்தில், 28ம் தேதி பயிற்சி துவங்கியது. இதை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் அய்யம்பெருமாள் துவக்கி வைத்தார்.
சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளில், 7ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும், 40 மாணவர்களுக்கு, மதுரையைச் சேர்ந்த பாரத் நிறுவனத்தின் இயக்குனர் பார்த்தசாரதி, பயிற்சி அளிக்கிறார். இந்நிறுவனம், "மாடலிங் ஏர்கிராப்ட்ஸ்" தயாரிப்பு மற்றும் சர்வீஸ் துறையில் ஈடுபட்டு வருகிறது.
முதல் நாளில், "ஏர்கிராப்ட்" தயாரிப்பு மற்றும் பறக்க விடுதல் குறித்து, மாணவர்களுக்கு எளிய முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று(மே 29), சிறிய மாதிரி ஏர்கிராப்ட்டுகள் பறக்கவிடும் நிகழ்ச்சி நடந்தது. அண்ணா பல்கலை விளையாட்டு மைதானத்தில், மாணவர்கள் மத்தியில், பல்வேறு வகையான மாதிரி ஏர்கிராப்ட்டுகளை பறக்கவிட்டு, பார்த்தசாரதி விவரித்தார்.
அவர் கூறியதாவது: மேற்கிந்திய நாடுகள், விமான போக்குவரத்து துறையில் பெரும் அளவிற்கு முன்னேறியுள்ளன. அடுத்த பத்தாண்டுகளில், விமான போக்குவரத்து பிரதானமாக இருக்கும். இத்துறைக்கு தேவையான டெக்னீசியன்கள், பைலட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஏராளமான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே, இத்துறையைப் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்; இத்துறை சார்ந்த படிப்புகளை படிக்க வேண்டும் என்பதற்காக, ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.
அந்த வகையில், சென்னையில் மூன்று நாள் பயிற்சி நடக்கிறது. "தெர்மாகோல்" குறைந்த திறன்கொண்ட மோட்டார் உள்ளிட்டவற்றைக் கொண்டு, மாதிரி ஏர்கிராப்ட்டுகளை மாணவர்கள் தயாரிக்கலாம். இதற்கு அதிகம் செலவு ஆகாது. இவ்வாறு பார்த்தசாரதி கூறினார்.
பயிற்சி குறித்து, மேற்கு மாம்பலம் பி.எஸ்.மூத்தா சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த பூஜாகுமார் மற்றும் வீணா ஆகியோர் கூறும்போது, "எங்களுக்கு, ஏரோநாட்டிகல் துறையில் அதிக ஆர்வம் உண்டு. ஏர்கிராப்ட்டை எப்படி தயாரிப்பது, எப்படி இயக்குவது என்பது குறித்து, பயிற்சி அளித்தனர். மிகவும் பயனுள்ளதாக இருந்தது&'&' என்றனர். இன்று(மே 29) பயிற்சி முடிந்ததும், மாணவர்களுக்கு சான்றிதழ் அளிக்கப்படுகின்றன.