உயர்கல்விக்கு மாணவர்களை தயார்படுத்த, அடித்தளமாக அமைவது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு. தேர்வு பற்றிய பயம் மாணவர்களுக்கு மட்டுமல்லாது பெற்றோர்களுக்கும் இந்த சமயத்தில் இருக்கும். மாணவர்கள் தேர்வுக்கு நன்கு தயாராக, பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளை இங்கு காண்போம்.
* வீட்டின் சூழ்நிலையை மாணவர்கள் படிப்பதற்கு ஏற்ப அமைதியாக வைத்துக்கொள்வது பெற்றோர்களின் முதல் கடமை.
* மாணவர்கள் அன்றாடம் மேற்கொள்ளும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பெற்றோர்கள் தடுக்க கூடாது. ஆனால் அதில் நேரத்தை வீணாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மாணவர்களை படி, படி என்று வற்புறுத்தக்கூடாது. அதற்கு பதிலாக அன்பாக அவர்களை படிக்க கேட்டுக் கொள்ள வேண்டும்.
* சில எளிய உடற்பயிற்சிகளை கற்றுத்தந்து, அதை அவர்கள் தினமும் முறையாக மேற்கொள்ளும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் அவர்கள் இரவில் நன்கு தூங்குகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.
* மாணவர்களுக்கு தகுந்த ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி, எல்லா விதத்திலும் பெற்றோர்கள் ஆதரவாக இருக்க வேண்டும்.
* மாணவர்களின் திறனையும், விருப்பத்தையும் தெரிந்து கொள்ளாமல், பெற்றோர்கள் தங்களது எதிர்பார்ப்பை மாணவர்கள் மீது திணிக்கக் கூடாது.
* மாணவர்கள் தனித்திறனை பெற்றோர்கள் ஊக்குவித்த வண்ணம் இருக்க வேண்டும். இதனால் அவர்கள் திறன் மேம்படும்.
* மாணவர்களிடம் நம்பிக்கையூட்டும் விதமாக பேசி, இதற்கு முன் தடைகள், தோல்விகள் ஏற்பட்டிருந்தால் அதை மறக்கச் செய்ய வேண்டும்.
* ஒருபோதும் தங்கள் குழந்தைகளை அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.
* தேர்வு சமயத்தில் தேர்வு முடிவைப் பற்றி நினைக்காமல், முடிந்த அளவு நல்ல முயற்சி எடுக்க மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும்.