ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மே, 16ம் தேதி தேர்வு முடிவு வெளியாகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. அரசு, சமூக நலத்துறை பள்ளி, நகரவை, ஆதிதிராவிட நலத்துறை, நிதியுதவி, சுயநிதி என, 2,071 பள்ளிகள் உள்ளன. 2011 -12ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கு அரசு பொது தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன.
இவ்வகுப்பை சேர்ந்த அனைவருக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் ப்ளஸ் 1 வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு, ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் முழுஆண்டு தேர்வு நடந்தது. தேர்வு முடிந்த குஷியில் மாணவ, மாணவியர் கோடை விடுமுறையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் மீண்டும் ஜூன் 1ம் தேதி பள்ளி துவங்குகிறது.
ஈரோடு மாவட்ட ப்ளஸ் 1 வகுப்பினருக்கு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பினருக்கான தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியாகிறது. இந்நிலையில், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பினருக்கு மே, 16ல் தேர்வு முடிவு வெளியாக உள்ளது.
இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பியுள்ளது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் தேர்வு முடிவு குறித்த ஒப்புதலை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.