தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இலவச ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம் துவக்கப்படுகிறது.
கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு துவக்கி வைக்கிறார். இன்று வருவோருக்கு ஸ்பாட் அட்மிஷன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி ஜின் பாக்டரி நடுநிலைப்பள்ளியில் பயிற்சி மையம் துவக்குவதற்கு மிகப் பெரிய ஹால் தயார் செய்யப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சி துவக்க விழா மே 13ம் தேதி(இன்று) மாலை 3 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில் நடக்கிறது.
மாநகராட்சி மேயர் சசிகலாபுஷ்பா தலைமை வகிக்கிறார். மாநகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் வரவேற்கிறார். துணைமேயர் சேவியர் முன்னிலை வகிக்கிறார். இலவச பயிற்சியை கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி சைலேந்திரபாபு துவக்கி வைக்கிறார். மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி ராஜேஸ்தாஸ் பேசுகிறார்.
சென்னை போலீஸ் பயிற்சி மைய ஐ.ஜி மாசாணமுத்து வாழ்த்துரை வழங்குகிறார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக, ஏ.டி.ஜி.பி லைலேந்திரபாபு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து விரிவான பயிற்சி வழங்குகிறார். பயிற்சிக்கு வருவோருக்கு ஸ்பாட் அட்மிஷன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி சார்பில் கோவைக்கு அடுத்து தூத்துக்குடியில்தான் இலவச ஐ.ஏ.எஸ் தேர்வுக்கான பயிற்சி மையம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.