கணினி மூலம் விவசாயிகளுக்கு ஆலோசனை: வேளாண்மை பல்கலை ஏற்பாடுஏப்ரல் 16,2012,10:41 IST
எழுத்தின் அளவு :

திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு தொடுதிரை கணினி மூலம் தகவல்கள் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக்தின் கீழ் செயல்படும் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், ஆறாவது வேளாண் அறிவியல் ஆலோசனைக் குழு கூட்டம் நடந்தது. துணைவேந்தர் முருகேச பூபதி தலைமை தாங்கினார். அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சாத்தையா வரவேற்றார்.
அனைத்து விவசாய தகவல்களையும் தெரிந்து கொள்வதற்கான தொடுதிரை கணினி பயன்பாட்டை துணைவேந்தர் முருகேச பூபதி துவக்கி வைத்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு இடு பொருட்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கியதுடன், பட்டயபடிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கி துணைவேந்தர் முருகேச பூபதி பேசியதாவது:
விவசாயிகள் வயது வரம்பு இல்லாமல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டு நடைபெற்று வரும் 3 ஆண்டு கால பி.எப்., டெக்னாலஜி பட்டய படிப்பில் சேரலாம். இதன் மூலம் அனைத்து விவசாயிகளும் பட்டயம் பெற முடியும்.
பெண் விவசாயி உமா பேசும் போது, பட்டய படிப்பிற்கான கட்டணம் அதிகமாக உள்ளது, குறைக்க வேண்டும் மற்றும் விவசாயிகளுக்கு இந்த பட்டயபடிப்பு பற்றி விளம்பரம் செய்ய வேண்டும் என பேசினார். அவரது ஆலோசனையை ஏற்று 7500 ரூபாயாக உள்ள கட்டணம் 3500 ரூபாயாக குறைக்கப்படும்.
விவசாயிகள், வேளாண் அறிவியல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தொடுதிரை கணினி மூலம், பருவத்திற்கேற்ற என்ன பயிர் ரகம், என்ன உரம்? எவ்வளவு போடுவது, விளை பொருட்களை எங்கு விற்பனை செய்வது பற்றிய தகவல்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். மார்கெட் நிலவரம், பூச்சி, நோய் அறிகுறிகள், விஞ்ஞானிகளின் பரிந்துரைகள், அரசுத்துறை திட்டங்கள் உள்பட அனைத்து விவரங்களும் எளிய தமிழில் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு துணைவேந்தர் முருகேச பூபதி பேசினார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இயக்குனர் கதிரேசன், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக இயக்குனர் கலைச்செல்வன், பெங்களுரு இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழக முதன்மை விஞ்ஞானி சாய்ராம் மற்றும் அறிவியல் சார் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொழில் நுட்ப வல்லுனர் ரேணுகா நன்றி கூறினார்.