அமெரிக்க கல்விக்கு தயாராவது எப்படி? | Kalvimalar - News

அமெரிக்க கல்விக்கு தயாராவது எப்படி?ஏப்ரல் 14,2012,12:17 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்காவில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மாணவர்களில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

சிறந்த பாடத்திட்டம், விரிவான அளவிலான பாடங்கள், நெகிழ்வுத்தன்மை, வசதிகள், ஆசிரியர் தகுதிகள், உதவித்தொகை சலுகைகள், விருப்ப நடைமுறை பயிற்சி மற்றும் பாடத்திட்ட நடைமுறை பயிற்சி போன்ற பலவிதமான வசதிகள், அமெரிக்க கல்வி நிறுவனங்களில் கிடைப்பதாலேயே, உலகெங்கிலுமுள்ள லட்சக்கணக்கான மாணவர்கள், அமெரிக்காவில் படிப்பதை விரும்புகிறார்கள்.

அமெரிக்க கல்வி நிலையங்களில் இடம்பெறும் செயல்பாட்டை தற்போது 5 பிரிவுகளாக அலசலாம். உங்களின் ஆசையை நிறைவு செய்வதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல் குறித்தும் தற்போது நாம் காணலாம்.

நிலை 1
உங்களின் விருப்பங்களை ஆராய்தல்

அமெரிக்கா முழுவதும் ஏறக்குறைய 4000க்கும் மேற்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், அனைத்து முக்கியத் துறைகள் தொடர்பான கல்வியை வழங்கி வருகின்றன. கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் என்பது அமெரிக்காவில் முக்கியமானது. குறிப்பிட்ட தர நிர்ணய அம்சங்களை ஒரு கல்வி நிறுவனம் கொண்டிருந்தால்தான், அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். எனவே, முறையான அங்கீகாரம் பெற்ற அமெரிக்க கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. www.chea.org மற்றும் www.aspa-usa.org போன்ற இணையதளங்களுக்கு சென்றால், அமெரிக்க கல்வி நிறுவனங்களின் அங்கீகார விபரங்கள் பற்றி தெரியவரும். மேலும், www.educationusa.state.gov மற்றும் www.petersons.com போன்ற இணையதளங்கள், அமெரிக்க கல்வி நிறுவனங்கள் மற்றும் அவை வழங்கும் படிப்புகள் பற்றிய விபரங்களைத் தருகின்றன.

அமெரிக்காவிலுள்ள ஏறக்குறைய அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், தங்களுடைய இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கு SAT மற்றும் TOEFL ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றின் மதிப்பெண்களையும், முதுநிலைப் படிப்புகளுக்கு GRE/GMAT மற்றும் TOEFL தேர்வுகளில் ஏதாவது ஒன்றின் மதிப்பெண்களையும் எதிர்பார்க்கின்றன. இதுபோன்ற தேர்வுகளுக்கான பதிவுகளை www.collegeboard.org, www.ets.org மற்றும் www.gmac.com போன்ற இணையதளங்களில் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளலாம்.

மேற்கூறிய தேர்வுகளை முடித்தப்பிறகு, உங்களுக்கான  கல்லூரி அல்லது பல்கலையை கவனமாக தேர்வுசெய்ய வேண்டும். இந்த செயல்முறையில், அங்கீகாரம், வழங்கப்படும் படிப்புகள், பாடத்திட்டம், பணிபுரியும் ஆசிரியர் தகுதிகள், கட்டணம் மற்றும் கல்லூரிகளின் ஏற்பு விகிதம் போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன. குறைந்தபட்சம் 6 முதல் 8 பல்கலைகளுக்கு விண்ணப்பித்தால் நல்லது.

நிலை 2
விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல்

நீங்கள் படிக்க விரும்பும் கல்வி நிறுவனத்தை தேர்வுசெய்த பிறகு, உங்களின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். விண்ணப்ப தொகுதியானது, விண்ணப்ப படிவம்(ஆன்லைன்), attested academic transcripts, standardised test scores, கல்லூரி விண்ணப்ப essay/நோக்க அறிக்கை, 2 அல்லது 3 பரிந்துரைக் கடிதங்கள், ஒரு ரெஸ்யூம் அல்லது CV மற்றும் நிதி ஆதரவு ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

இந்த முழு விண்ணப்பத் தொகுதியும், test மதிப்பெண்கள் உட்பட, கடைசி தேதிக்குள் குறிப்பிட்ட பல்கலைக்கு சென்று சேர்வதை உறுதிசெய்ய வேண்டும்.

நீங்கள் தயாரிக்கும் நோக்க அறிக்கை, essay, பரிந்துரைக் கடிதங்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தவும். ஏனெனில், ஒரே மதிப்பெண்கள் மற்றும் ஒரேவிதமான கல்வி பின்புலங்கள் கொண்ட மாணவர்களின் விண்ணப்பங்களுக்கிடையே போட்டி ஏற்படுகையில், மேற்கூறிய ஆவணங்களின் தனித்தன்மையும், சிறப்பும் பரிசீலிக்கப்பட்டு, முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

நிலை 3
உங்கள் படிப்பிற்கான கட்டணம்

உங்களின் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு ஆகும் செலவை கணக்கிட்டு, அதன்பொருட்டு திட்டமிடவும். உங்களின் பெற்றோருடன் கலந்தாலோசனை செய்து, உங்களின் வளங்களை திரட்டவும். உங்களின் சொந்த நிதியாதாரங்கள் தவிர்த்து, அமெரிக்க பல்கலைகள், உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்குகின்றன.

கல்வி உதவித்தொகைகளைப் பெற அதிக போட்டி நிலவும் என்பதால், நல்ல மெரிட் உள்ள மாணவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும். ஊக்கத்தொகை என்பது கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் கிராஜுவேட் அல்லது நிர்வாக நோக்கங்களுக்காக வழங்கப்படுகிறது. மேலும், வெளிநாட்டு கல்விக்காக இந்திய வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுகின்றன. அதன் மூலமும் பயன்பெறலாம்.

அமெரிக்காவில், அன்றாட வாழ்க்கை செலவினங்கள் இல்லாமல், ஓராண்டுக்கான கல்விக் கட்டணம் மட்டும் 15000 முதல் 40000 டாலர்கள் வரை செலவாகும். வாழ்க்கைச் செலவினங்கள் நீங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து வேறுபடும். அமெரிக்காவின் உட்புற பகுதிகளைவிட, கடற்கரைப் பகுதிகளில் வாழ்வதற்கு கூடுதல் செலவு பிடிக்கும்.

அமெரிக்காவிற்கு படிக்க செல்பவர்கள், தனியார் பல்கலைகளை தேர்ந்தெடுப்பதைவிட, அரசு பல்கலைகளை தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம். ஏனெனில், அரசு பல்கலைகளில் கட்டணம் குறைவு. www.fundingusstudy.org மற்றும் www.educationusa.info/financial-aid இணையதளங்களில் தேடினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு கிடைக்கும் உதவித்தொகைகள் பற்றிய விபரங்களை அறியலாம்.

நிலை 4
மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தல்

ஒரு பல்கலைக்கழகத்தில் உங்களுக்கு இடம் கிடைத்ததை உறுதிசெய்யும் I - 20 ஐ நீங்கள் பெற்ற பிறகு, மாணவர் விசா பெறுவதற்கான செயல்பாட்டை நீங்கள் தொடங்க வேண்டும். தென்னிந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், மாணவர் விசாவைப் பற்றி அறிந்துகொள்ள http://Chennai.USConsulate.gov என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் செல்ல வேண்டும். அமெரிக்கன் நூலகம் மற்றும் அமெரிக்க துணைத் தூதரகம் போன்றவை, ஒவ்வொரு இரண்டாம் சனிக்கிழமையும் காலை 10 முதல் 11 மணிவரை, ஓரியன்டேஷன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

இந்நிகழ்ச்சியானது, விசா தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை உள்ளடக்கியது மற்றும் அனைவருக்குமானது. ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, அமெரிக்க துணைத் தூதரகத்தில் நுழையும்போது, ஒருவரின் பாஸ்போர்ட் அல்லது டிரைவிங் லைசன்ஸ் ஆகிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையை கொண்டுசெல்ல வேண்டும்.

நிலை 5
புறப்பட தயாராகுங்கள்

உங்களின் விசாவைப் பெற்றபிறகு, அமெரிக்கப் பயணத்திற்கு தயாராக வேண்டும். டிக்கெட் புக் செய்ய வேண்டும், பாஸ்போர்ட், விசா, மதிப்பெண் பட்டியல்கள், பட்ட சான்றிதழ்கள், மருத்துவ ஆவணங்கள், பிறப்பு சான்றிதழ்கள், ஏற்பு கடிதம், I -20, SEVIS ரசீது உள்ளிட்ட ஆகியவற்றை தயாராக, மொத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் ஜுலை முதல் வாரத்தில், அமெரிக்காவிற்கு புறப்படுவதற்கு முந்தைய ஓரியன்டேஷன் நிகழச்சியை EducationUSA என்ற மையங்கள் நடத்துகின்றன. இந்நிகழ்ச்சியில், பழைய மாணவர்களும், இதர நிபுணர்களும் கலந்துகொண்டு, அமெரிக்காவின் கல்வி - கலாச்சார வாழ்க்கை, குடியேற்ற நடைமுறைகள் மற்றும் உள்நுழைவு விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்குவார்கள். மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகளின் மூலமாக, ஒரே பல்கலைக்கு படிக்க செல்லும் மாணவர்களிடையே, இங்கேயே பழக்கமும் ஏற்பட்டு விடுகிறது.

இந்தியாவில், United States - India Educational Foundation(USIEF) என்ற அமைப்புதான், அமெரிக்காவில் உயர்கல்வி கற்பது பற்றி தகவல்களை அளிக்கும் ஒரு ஆதாரப்பூர்வ வள மையம். மேலும், கடந்த 60 ஆண்டுகளாக, USIEF ல் உள்ள EducationUSA ஆலோசனை மையங்கள்,, அமெரிக்காவில் கல்விகற்க விரும்பும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. 400க்கும் மேற்பட்ட ஆலோசனை மையங்களின் உலகளாவிய நெட்வொர்க்காக திகழும் EducationUSA, அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஆதரவோடு செயல்படுகிறது.

USIEF -ஐ பற்றி மேலும் பல தகவல்களை அறிந்துகொள்ள, அதன் சென்னை அலுவலகத்திற்கு 044-28574423/4131 என்ற எண்ணிற்கோ அல்லது usiefchennai@usief.org.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொள்ளவும்.

இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையே ஏற்பட்ட கல்வி பரிமாற்ற ஒப்பந்தப்படி, கடந்த 1950ம் ஆண்டு USIEF ஏற்படுத்தப்பட்டது. EducationUSA centres என்பதுடன் சேர்ந்து, கூடுதலாக, இந்திய - அமெரிக்க கல்வி பரிமாற்ற செயல்பாட்டில் பல பணிகளை USIEF செய்துவருகிறது. இதைப்பற்றி மேலும் தகவல் அறிய www.usief.org.in என்ற இணையதளம் செல்லவும்.


வாசகர் கருத்து

VERY USEFULL INFORMATION FOR FRESH STUDENTS AND PARENTS ALSO .
by RAMASAMY,India    14-ஏப்-2012 17:38:01 IST
please give guidelines for canada
by sureshnarayanan,India    14-ஏப்-2012 17:18:38 IST

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us