அகில இந்திய பார் தேர்வு - ஓர் அலசல் | Kalvimalar - News

அகில இந்திய பார் தேர்வு - ஓர் அலசல்டிசம்பர் 04,2012,11:02 IST

எழுத்தின் அளவு :

சட்டப் படிப்பை முடித்த பட்டதாரிகள், வழக்கறிஞராக பணியாற்ற வேண்டுமெனில், அவர்கள், அகில இந்திய பார் தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்ற விதி உள்ளதால், அத்தேர்வைப் பற்றி தெளிவாக அறிவது அவசியமாகிறது. நாடெங்கிலும், அத்தேர்வை எதிர்த்து பல போராட்டங்கள் ஒரு பக்கம் நடைபெற்றாலும், அத்தேர்வை தொடர்ந்து நடத்துவதில் இந்திய பார் கவுன்சில் உறுதியாக உள்ளது. எனவே, அத்தேர்வுக்கு தயாராகும் பணியை துவக்க வேண்டியது, சட்டப் பட்டதாரிகளுக்கு அவசியமாகிறது.

தேர்வின் நோக்கம்

இந்திய பார் கவுன்சிலால் நடத்தப்படும், அகில இந்திய பார் தேர்வானது, சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்கள், வழக்கறிஞராக பயிற்சி பெறும் தகுதியை வழங்குவதற்காக நடத்தப்படுகிறது. இத்தேர்வானது, அடிப்படை நிலையில், ஒருவரின் திறன் மற்றும் பகுப்பாய்வு திறனை மதிப்பிடுவதோடு, அவர் வழக்கறிஞராக பணிபுரிவதற்கான ஒரு குறைந்தபட்ச தகுதியையும் நிர்ணயிக்கிறது.

இத்தேர்வை, வெற்றிகரமாக எழுதி தேறியவர்களுக்கு, முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள், இந்திய பார் கவுன்சிலால் Certificate of Practice என்ற சான்றிதழ் வழங்கப்படும். கடந்த 2009-10ம் கல்வியாண்டிலிருந்து சட்டப் படிப்பை முடித்து பட்டம் பெற்றவர்கள் அனைவரும், வழக்கறிஞராக பணியாற்ற, இத்தேர்வை கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

தேர்வின் தன்மை

இத்தேர்வானது, முதன்முறையாக, கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 6ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வை, குறைந்தபட்சம் வருடத்திற்கு 2 முறை நடத்த அகில இந்திய பார் கவுன்சில் திட்டமிட்டுள்ளது மற்றும் தேர்வு தேதிக்கு, குறைந்தபட்சம், 3 மாதங்களுக்கு முன்பாகவே பாடத்திட்டத்தை(Syllabus) வெளியிட திட்டமிட்டுள்ளது.

இத்தேர்வானது, Pass அல்லது Fail தேர்வாகும். இதில், Rank, Percentile, Percentage மற்றும் மதிப்பெண் அறிவிப்பு போன்றவை கிடையாது. மேலும், இத்தேர்வில் தேர்ச்சிபெறும் வரை, ஒருவர் எத்தனைமுறை வேண்டுமானாலும் எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை இந்திய பார் கவுன்சில்(BCI) நிர்ணயிக்கும்.

தேர்வுக்கு விண்ணப்பித்தல்

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான நடைமுறையை எளிதாக்க, BCI முயற்சித்து வருகிறது. தற்போது, இத்தேர்வெழுதுவோர், www.allindiabarexamination.com என்ற வலைத்தளம் சென்று, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறையானது, மொத்தம் 3 நிலைகளைக் கொண்டது. அவை,

நிலை 1 - மேற்கண்ட இணையதளத்தில் நம்மை பதிவுசெய்து, விண்ணப்ப எண்ணைப் பெறுதல்.

நிலை 2 - SBI வங்கி சலானை பதிவிறக்கம் செய்து, முறையாக நிரப்பி, SBI வங்கி கிளையில் கட்டணத்தை செலுத்துதல்.

நிலை 3 - இணையதளம் சென்று, விண்ணப்பத்தை திறந்து, அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து, அதை சமர்ப்பித்தல்.

இத்தேர்வை, அகில இந்திய அளவில் தொடர்ச்சியாக நடத்துவதற்கான ஒரு ஏஜென்சியை முடிவு செய்யவுள்ளது. தற்போதைக்கு, உதவிக்காக, Noida-based IT implementation and delivery நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. தேர்வு தள்ளிப்போகும் நிலையில், சட்டப் பட்டதாரிகளை, தற்காலிகமாக நீதிமன்றங்களில் பணியாற்றும் அனுமதியை BCI வழங்கியுள்ளது.

கட்டண உயர்வு

2012ம் ஆண்டு அக்டோபரில், முதல் முறை எழுதுபவர்களுக்கு, கட்டணமானது, ரூ.1300ல் இருந்து, ரூ.1900 என்ற அளவுக்கு அதிகரித்தது. அதேபோன்று, ஏற்கனவே பதிவுசெய்து, மீண்டும் தேர்வெழுதுபவர்களுக்கு, கட்டணமானது, ரூ.900ல் இருந்து, ரூ.1400 ஆக அதிகரித்துள்ளது. இத்தேர்வை, ஒருவர் தேர்ச்சிபெறும் வரை எத்தனைமுறை வேண்டுமானாலும் எழுதலாம் என்பதால், பலர் திரும்ப திரும்ப எழுதுவதால், தேர்வுக் கட்டண வருமானம் அபரிமிதாக கிடைக்கிறது. எனவே, பார் கவுன்சிலின் பணம் சம்பாதிக்கும் நோக்கம் விமர்சிக்கப்படுகிறது.

தேர்வின் தரம் எப்படி?

அகில இந்திய பார் தேர்வு, தரமற்றதாக உள்ளது என்ற விமர்சனம் பரவலாக எழுகிறது. சிறந்த சட்டக் கல்லூரிகளில் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு, இந்தத் தேர்வு ஒரு பொருட்டே அல்ல என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேசப்படுகிறது. மேலும், நல்ல கல்லூரிகளில் சிறப்பாக பயிற்சியெடுத்துவிட்டு, மீண்டும் இப்படியொரு தேவையற்ற எளிமையான தேர்வை எழுதுவது வேண்டாத வேலை என்று பல மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே, இந்த தேர்வின் தற்போதைய வடிவத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது. இப்போதைக்கு நடைமுறையில் இருக்கும் இத்தேர்வால், தரமான வழக்கறிஞர்களை உருவாக்க முடியாது என்ற விமர்சனம் வலுவாக எழுகிறது. ஆண்டுதோறும், பல்வேறான சட்டக் கல்லூரிகளில் படித்து வெளிவரும் ஏராளமான சட்டப் பட்டதாரிகளில், தகுதியானவர்களை தேர்வு செய்வது என்ற இத்தேர்வின் நோக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றாலும், அது தரமானதாக இருந்தால்தான், சிறந்த வழக்கறிஞர்கள் கிடைப்பார்கள் என்பதை பார் கவுன்சில் கவனிக்க வேண்டும் என்பதே சம்பந்தப்பட்டவர்களின் வாதம்.

AIBE தேர்வு எப்படி இருக்கும்?

* இதுவொரு திறந்த புத்தகத் தேர்வு. படித்தல் உபகரணங்கள் மற்றும் குறிப்புகள், தேர்வின்போது எடுத்துச்செல்ல, அனுமதிக்கப்படும். ஆனால், லேப்டாப் மற்றும் மொபைல் போன்கள் அனுமதியில்லை.

* இந்திய பார் கவுன்சில் வெளியிட்ட பாடத்திட்டத்திலிருந்து 100 multiple choice கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.

* 2 விதமான கேள்வி தொகுப்புகள் இடம்பெறும். பரவலான சட்டப் பகுதிகளிலிருந்து அடிப்படையானவைள் மற்றும் சட்டத் துறையில் புதிதாக சேர்ந்துள்ள அம்சங்கள் ஆகிய 2 வகைகள்.

* அறிவு அடிப்படையில் மற்றும் பகுப்பாய்வு அடிப்படையில் ஆகிய 2 விதமான கேள்விகள் கேட்கப்படும்.

* மொத்த தேர்வு நேரம் 3.5 மணி நேரங்கள்.

* ஒரு வழக்கறிஞர், வெறுமனே சட்டத் தொகுப்புகளை மனப்பாடம் செய்து வைத்திருப்பவராக இல்லாமல், அவர், சட்டத்தினை ஆழமாக புரிந்து கொண்டவராக இருப்பதை மதிப்பிடுவதே இத்தேர்வின் நோக்கம்.

இத்தேர்வுக்கு தயாராதல் குறித்த அதிக விபரங்களை அறிந்துகொள்ள www.barcouncilofindia.org/preparatory-material-model-question-papers-released என்ற வலைத்தளம் செல்க.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us