பாடங்களை கவனித்து படித்தால் நூற்றுக்கு நூறு நிச்சயம் | Kalvimalar - News

பாடங்களை கவனித்து படித்தால் நூற்றுக்கு நூறு நிச்சயம்

எழுத்தின் அளவு :

"பாடங்களை கவனித்து படித்தால், கட்டாயமாக சென்டம் வாங்க முடியும்" என தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தினமலர் டி.வி.ஆர்., அகாடமி சார்பில் பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவ, மாணவிகளுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில் கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடந்தது.

இதில், மாணவர்கள் பயமின்றி தேர்வை எதிர்கொண்டு எளிதில் சதம் அடிக்க ஆசிரியர்கள் கூறிய அறிவுரைகள் :

சகுந்தலா, தமிழ் (முதல்வர், நாச்சியார் வித்யாலயம், ஜமீன்ஊத்துக்குளி): பிளஸ் 2வில் தமிழ் பாடத்தை கவனமுடன் படித்தால், நூறு மதிப்பெண் பெற முடியும். திட்டமிட்டு படிக்கும் பழக்கத்தையும், எழுத்து பிழை இல்லாமல் எழுதும் பண்பையும் வளர்த்து கொள்ள வேண்டும். தமிழை பொறுத்தவரை, ஒவ்வொரு எழுத்து பிழைக்கும் அரை மதிப்பெண் குறையும். முதல்தாளில், 46 மதிப்பெண்களுக்கு ஒரு மதிப்பெண்ணும், மற்ற 54 மதிப்பெண்கள் செய்யுள், அதை சார்ந்த வினா-விடையாக உள்ளது.

செய்யுள் பகுதி வினாக்களுக்கு பாடல் வரிகளை எழுதினால், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். பத்தி, பத்தியாக எழுதாமல், பாயின்டாக எழுதுவது நல்லது. தமிழ் முதல்தாளில், 100 மதிப்பெண்ணில், திருக்குறளுக்கு 30 மதிப்பெண் வழங்கப்படுகிறது. இப்பகுதியில் மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்தினால், முழு மதிப்பெண் பெறலாம்.

திருக்குறள் பகுதியிலிருந்து வரும் வினாக்களுக்கு விடையளிக்கும் போது, குறளை மேற்கோள் காட்டினால், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும். நெடுவினாக்களுக்கு, தலைப்பும், உட்தலைப்பும் அவசியம். மனப்பாட பகுதிகளுக்கு, பா வகையும், ஆசிரியர் பெயரையும் குறிப்பிட வேண்டும். பா வகை எழுதினால், இரு மதிப்பெண் உண்டு. தமிழில், இலக்கணப்பகுதிகள், நிறுத்தற்குறிகள் இடுதல், பாடப்பின் பகுதிகளில் உள்ள வினாக்களுக்கு மனப்பாடம் செய்தல் ஆகியவை அதிக மதிப்பெண் பெற உதவும். இரண்டாம் தாளில், உரைநடைக்கு 30 மதிப்பெண் உண்டு. பாடங்களை தேர்வு செய்து படித்தால், எளிதில் மதிப்பெண் பெற முடியும். கட்டுரை வினாவில், மைய கருத்தை கருப்பு பேனாவால், முதலில் எழுதி சுட்டி காட்டினால் மதிப்பெண் கிடைக்கும்.

முத்துகுமார், ஆங்கிலம் (அரசு மேல்நிலைப்பள்ளி, சேரிபாளையம்): ஆங்கிலத்தில், இலக்கண பகுதியில் எளிதாக முழு மதிப்பெண்ணையும் பெற முடியும். கட்டுரை வினாக்கள் பெரும்பாலும் முதல் நான்கு பாடங்களிலிருந்துதான் வினா கேட்கப்படுகிறது. நெடு வினாக்களை, தெளிவாக, பிழையின்றி எழுத வேண்டும். அப்போதுதான், அந்த பகுதியில் முழு மதிப்பெண் கிடைக்கும். இந்த வினாக்கள் மூன்று பக்கம் எழுதுவது நல்லது.

செய்யுள் பகுதி வினாக்களில், முக்கிய வினாக்களை மையப்படுத்தி காட்டலாம். செய்யுள் பகுதியில், விளக்கமளிக்கும் வினாக்களுக்கு, செய்யுள் தலைப்பு, ஆசிரியர் பெயர் எழுதினால் இரண்டு மதிப்பெண் கிடைக்கும். செய்யுள் வரிகளுக்கான விளக்கத்திற்கு ஒரு மதிப்பெண் கிடைக்கும்.

துணைப்பாட கட்டுரைகளை படிக்கும் போது, முக்கிய வரிகளை பதிவு செய்து கொண்டால், ஒரு மதிப்பெண் பெற முடியும். கட்டுரை வடிவிலான வினாக்களுக்கு பக்க தலைப்புகளும், முடிவுரையும் போட்டால் முழு மதிப்பெண் கிடைக்கும். இ-மெயில் எழுதும் வினாவுக்கு www என எழுதக்கூடாது. அதேபோல், பெரிய எழுத்துகளையும் பயன்படுத்தகூடாது. இந்த தவறால், மதிப்பெண் இழக்கின்றனர். ஒரு மதிப்பெண் வினாக்களை தனியாக எழுதி கண்ணுக்கு தெரியும் வகையில் ஒட்டி கொண்டால் மனதில் எளிதாக பதியும்.

மனோன்மணி, கணிதம் (நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி): கணக்குகளை அடிக்கடி போட்டு பழக்கம் எடுத்தால் இந்த தேர்வில் எளிதில் சதம் அடிக்க முடியும். தேர்வில், வினாத்தாளை முதலில் நன்கு படித்து பார்க்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் நன்கு தெரிந்த வினாக்களை எழுத வேண்டும். நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். கணித தேர்வில், பகுதி - அ பிரிவுக்கு ஒரு மதிப்பெண் வினா வழங்கப்படும். இதற்கு 20 நிமிடங்களும், பகுதி-ஆ பிரிவுக்கு 45 நிமிடங்களும், பகுதி - இ பிரிவுக்கு 85 நிமிடங்களும் ஒதுக்க வேண்டும்.

அலகுகள் மற்றும் குறியீடுகளை சரியாக குறியிட வேண்டும். இதற்கு ஒரு மதிப்பெண் உண்டு. விடைகளை கட்டமிட்டு காட்ட வேண்டும். கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு கணித படிக்கும் மதிப்பெண் வழங்கப்படும். ஏதாவது ஒரு படியை தவறாக எழுதி விடை சரியாக இருந்தாலும் மதிப்பெண் இழக்க வாய்ப்புண்டு. புத்தகத்திலுள்ள கணக்குகளும், எடுத்துக்காட்டு வினாக்களும் தான் 94.6 சதவீதம் வருகின்றன. மீதமுள்ள 5.4 சதவீதம் புத்தகத்திலிருந்து வெளியில் கேட்கப்படுகிறது.

கணக்கை அடிக்கடி செய்து பயிற்சி எடுத்தால், இந்த பாடத்தில் நூறு மதிப்பெண் எடுக்கலாம். கணக்கை எளிதாக தேர்வு செய்து வழிமுறையுடன் போட்டால், கணக்கில் சதம் உறுதி என்றார்.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us