உயர்தகுதிகள் கொண்ட பணியாளர்கள் நாட்டிற்குள் வருவது மற்றும் தங்கியிருப்பது தொடர்பாக ஜெர்மனி அரசாங்கம் இயற்றியிருக்கும் புதிய சட்டமானது, அங்கே படிக்க செல்லும் சர்வதேச மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதன்மூலம், அந்நாட்டில் தங்களின் உயர்கல்வியை நிறைவுசெய்யும் மாணவர்கள், படிப்பு முடிந்தபின்பும், சிறிதுகாலம் தங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
முந்தைய சட்ட விதிப்படி, ஜெர்மன் பல்கலைகளில் படிக்கும் மாணவர்கள் தங்களின் படிப்பு முடிந்த பின்பாக, சுமார் 12 மாதங்கள் மட்டுமே அந்நாட்டில் தங்கியிருக்க முடியும். ஆனால், பட்டப் படிப்பு நிலையிலான பணிவாய்ப்புகளை தேடும் அக்காலகட்டம், தற்போது 18 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் பட்டப் படிப்பு தகுதி நிலையிலான பணியை தேடுகையில், 90 நாட்கள் வரை பகுதிநேரமாக பணிபுரியலாம் என்பது 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. German Federal Employment Agency -யிடம் அனுமதி பெறாமல், எவ்வளவு மணிநேரம் அல்லது நாட்கள் வேண்டுமானாலும் பணிபுரியலாம்.
பட்டதாரிகள், Settlement permit பெற தகுதியுடையவர்கள் ஆகிறார்கள் மற்றும் 2 வருடங்களுக்குப் பிறகு, முடிவற்ற தங்கும் உரிமையும் பெறலாம். தற்போதைய நிலையில், வேலை தேடுகையில், ஒரு பட்டதாரி, 6 மாதங்கள் வரை தங்கியிருக்கும் உரிமையைப் பெறுகிறார். ஐரோப்பிய யூனியனுக்கு வெளியேயிருந்து வரும் மாணவர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் ஊக்குவித்து, உற்சாகப்படுத்துவதற்காக இந்த புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
நீல அட்டை(Blue Card)
இந்த புதிய சட்டத்தில், ஏற்படுத்தப்பட்டுள்ள மற்றொரு மாற்றமானது, வேலை ஒப்பந்தத்துடன், கல்வி அல்லது தகுதிவாய்ந்த தொழில் நிபுணர் என்ற வகைப்பாட்டில், குறைந்தபட்சம் 35,987 அமெரிக்க டாலர் சம்பளத்தில், 4 ஆண்டுகள் வரை நீல அட்டையைப் பயன்படுத்தி பணியாற்றலாம்.
இந்த நீல அட்டையின் மூலம், உயர்தொழில்நுட்ப தகுதிப் பெற்ற ஐரோப்பிய யூனியன் நாடுகளைச் சேராத ஒருவர், அந்த யூனியனுக்குள் வரும் நாடுகள் அனைத்திலும் பணிபுரியலாம் மற்றும் வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த வரையறைக்குள் டென்மார்க், ஐயர்லாந்து மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் வரமாட்டா.
மேலும், இதுபோன்ற நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்பான வேலைவாய்ப்பு கட்டுப்பாடுகளும் எளிதாக்கப்பட்டுள்ளன. அவர்கள் இனிமேல், ஜெர்மன் பெடரல் ஏஜென்சியின் அனுமதி கேட்கத் தேவையில்லை. நீல அட்டை வைத்திருப்பவர்கள், 2 முதல் 3 வருடங்களுக்குப் பிறகும், குடியேற்ற அனுமதிக்கு ஏற்கனவே தகுதியுடையவர்கள்.
உலகம் உங்கள் கையில்
சமீப வருடங்களில், உலகளவில் கல்வி கற்கச் செல்லும் மாணவர் பயணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. பல மாணவர்கள், ஐரோப்பாவிலும், ஆசியாவின் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் புதிய கல்வி சாலைகளைத் தேடி செல்கின்றனர். கடுமையாக்கப்பட்ட விசா விதிமுறைகள், குறைந்த வேலை வாய்ப்புகள் மற்றும் சமூகப் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால், சர்வதேச மாணவர்களை அதிகளவில் ஈர்க்கும் வழக்கமான இடங்கள், கலையிழந்து காணப்படுகின்றன.
சமீபகாலமாக, ஐரோப்பாவில், சர்வதேச மாணவர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய இடமாக ஜெர்மனி உருவெடுத்துள்ளது. இதற்கு பலவிதமான முக்கிய காரணங்கள் உள்ளன. ஆங்கில வழியில கற்பிக்கப்படும் சர்வதேச பட்டப் படிப்புகள்(International Degree programmes - IDP), கல்விக் கட்டண சலுகைகள் மற்றும் சமூக பாதுகாப்பு போன்றவை அவற்றுள் முக்கியமானவை. THES Survey 2011 சர்வேப்படி, உயர்கல்விக்கான சர்வதேச நாடுகளின் பட்டியலில் முதலிடம் பெற்றது.
ஜெர்மனியில், சர்வதேச மாணவர்களுக்கு, நீடித்த வேலைவாய்ப்பை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வழங்கப்படுவதும் ஒரு காரணம். இந்த நிலையானது, அந்நாட்டை உலகமயமாக்கலுக்கு மட்டும் இட்டுசெல்லவில்லை, மாறாக, சர்வதேச அளவிலான சிறந்த ஒத்துழைப்புக்கும் உதவுகிறது.
கடந்த 2010-11ம் ஆண்டில், 2,52,032 சர்வதேச மாணவர்கள் ஜெர்மனியில் படித்தார்கள். இது அந்நாட்டில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் 12% ஆகும்.
ஜெர்மனியானது, ஒரு செலவுவாய்ந்த நாடாக இருந்தாலும், பல பல்கலைக்கழக நகரங்களில், வீட்டு உபயோகப் பொருட்கள், சாதனங்கள், கணிப்பொறிகள் மற்றும் இதர பயன்பாட்டுப் பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளும் வகையில் Second hand கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொறியியல் மற்றும் அறிவியல் பிரிவுகளில், முழு அளவிலான அல்லது பாதி அளவிலான ஆங்கிலத்தில் கற்பிக்கப்படும் சுமார் 300 சர்வதேச பட்டப் படிப்புகள் இந்நாட்டில் உள்ளன. University of Stuttgart, University of Regensburg, Technical University of Berlin and University of Duisburg Essen போன்றவை நாட்டின் சிறந்த பல்கலைக்கழகங்களில் முக்கியமானவை. ஜெர்மனியிலுள்ள கல்வி நிறுவனங்களில், ஆசிரியர்களும், மாணவர்களும் படிப்பு தொடங்கிய காலம் முதலே ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்பது ஒரு சிறப்பம்சம்.