ஜி.ஆர்.இ., தேர்வு எதற்காக பயன்படுகிறது? இதைப் பற்றிய முழு தகவல்களைத் தர முடியுமா? | Kalvimalar - News

ஜி.ஆர்.இ., தேர்வு எதற்காக பயன்படுகிறது? இதைப் பற்றிய முழு தகவல்களைத் தர முடியுமா? ஜூன் 16,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

அமெரிக்கா மற்றும் ஆங்கில மொழி பேசப்படும் ஒரு சில வளர்ச்சியடைந்த நாடுகளிலும் பட்டப்படிப்புகளைப் படிக்க விரும்புபவர்கள் ஜி.ஆர்.இ., தேர்வின் மூலமாகவே அனுமதி பெற முடியும். இதை நிர்வகித்து நடத்தி வருவது இ.டி.எஸ்., எனப்படும் எஜூகேஷனல் டெஸ்டிங் சர்விஸ் என்னும் அமைப்பாகும்.

அடிப்படையில் ஜி.ஆர்.இ., தேர்வானது ஒரு மாணவரின் யோசிக்கும் திறன் பற்றிய சாராம்சத்தை சோதிக்கும் விதத்தில் இருந்தாலும் கூடுதலாக ஆங்கில வார்த்தைகள், கணிதம் மற்றும் பிரித்து ஆராயும் திறன்கள், எழுதும் திறன் ஆகியவற்றை சோதிக்கிறது. இது கம்ப்யூட்டர் மூலமாக நடத்தப்படும் தேர்வாகும். உலகின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மையங்களில் மட்டுமே இது நடத்தப்படுகிறது. தொழில் நுட்ப வசதியில்லாத ஒரு சில இடங்களில் மட்டும் இது எழுத்துத் தேர்வாக நடத்தப்படுகிறது.

ஜி.ஆர்.இ., தேர்வுகளில் எடுக்க வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் குறித்து கல்வி நிறுவனங்களுக்கிடையே மாறுபட்ட தேவைகள் உள்ளன. சில கல்வி நிறுவனங்களில் இத் தேர்வில் பெறும் மதிப்பெண் வெறும் தேர்ச்சிக்கான அடிப்படைகளுல் ஒன்றாக இருந்தாலும் மற்ற சில கல்வி நிறுவனங்களில் இந்த மதிப்பெண்ணே சேர்க்கையை நிர்ணயிக்கிறது.

ஜி.ஆர்.இ., தேர்வானது தரப்படுத்தப்பட்ட தேர்வு முறையில் நடத்தப்பட்டாலும் இது இலகுத்தன்மையற்று இருப்பதாக விமரிசனங்கள் உள்ளன. மாணவரின் தேர்வை எதிர்கொள்ளும் முறையை மையமாகக் கொண்டே ஜி.ஆர்.இ., தேர்வு நடத்தப்பட்டன. இந்த விமர்சனங்களை மனதில் கொண்டு இ.டி.எஸ்., நிறுவனம் சமீப காலமாக இத் தேர்வுகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதில் 2 தாள்கள் உள்ளன. பொதுக் கேள்விகள் மற்றும் உளவியல் கேள்விகள் ஆகியவை இவை.

பொதுத் தேர்வில் வெர்பல், குவான்டிடேடிவ், அனலிடிகல் ரைட்டிங் என 3 பகுதிகள் உள்ளன. வெர்பல் மற்றும் குவாண்டிடேடிவ் பகுதிகளுக்கு 200 முதல் 800 மதிப்பெண் வரை உள்ளது. அனலிடிகல் ரைட்டிங்கில் ஒருவரின் மதிப்பெண் 0 முதல் 6 வரை பிரிக்கப்பட்டு இந்த வரிசையில் 1/2 மதிப்பெண்களாகக் கூட்டப்படுகிறது.

2வது தேர்வான பாடப் பிரிவுத் தேர்வில் பட்டப்படிப்பு படிப்பதற்குத் தேவையான உளவியல் கோட்பாடுகளில் சோதிக்கும் வகையில் 200 முதல் 800 மதிப்பெண் வரை உள்ளது. பட்டப்படிப்பு படிக்க விரும்புபவர்கள் வெர்பல் மற்றும் குவாண்டிடேடிவ் பகுதிகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் அனுமதி பெற முடியும்.

ஒவ்வொரு தேர்விலும் குறைந்தபட்சம் 550 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்புக்கு போட்டி குறைவு என்பதால் 450 முதல் 500 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பட்ட மேற்படிப்புக்கு போட்டி குறைவு என்பதால் 450 முதல் 500 மதிப்பெண்களைப் பெற்றால் போதுமானது. பொதுவாக எந்த கல்லூரியில் சேருவதாக இருந்தாலும் குறைந்தது 450 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

இத் தேர்வை எழுத கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியான தேர்வு மையங்கள் உள்ளன. பொதுப் பகுதித் தேர்வை எழுத பல நாட்களுக்கு முன்பாகவே பதிவு செய்ய வேண்டியிருக்கும். பாடப் பிரிவு தேர்வு எழுத குறைந்தது 6 வாரங்களுக்கு முன் பதிவு செய்ய வேண்டும்.

ஜி.ஆர்.இ. தேர்வு எழுத ஆன்லைனிலும் இமெயிலிலும் பதிவு செய்யலாம். ஜி.ஆர்.இ. தகவல் மற்றும் பதிவுக் கையேட்டில் உள்ள பதிவுத் தாள் மூலமாகவும் பதிவு செய்யலாம். இதை ஆன்லைனிலோ அல்லது GRE, CN 6000, PRINCETON, NJ 08541 6000 என்னும் முகவரியிலிருந்து தபாலிலும் பெறலாம்.

ஜி.ஆர்.இ. தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முழுமையாக நாம் தயாராவது முக்கியம். இத் தேர்வுக்கான தரமான புத்தகங்களை வாங்கி முறையான படிப்புத் திட்டம் ஒன்றை வடிவமைத்துக் கொண்டு அதில் எந்த பிசகுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும். ஆங்கில வார்த்தைகள், அனாலஜி, ஆங்கில ரீடிங் காம்ப்ரிஹென்சன், ஜியாமெட்ரி, அல்ஜிப்ரா போன்ற பகுதிகளில் சிறப்பான திறன்களைப் பெற தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.

இதில் வெற்றி பெற குறுக்கு வழிகளோ சுருக்கமான பிற முறைகளோ கிடையாது. முழுமையான திட்டமிட்ட நீண்ட நாள் முயற்சிகள் மட்டுமே இதில் வெற்றியைக் கொண்டு வரும். பொதுப் பிரிவுத் தேர்வை நவம்பரில் எழுதுவதே அறிவுறுத்தப்படுகிறது. போதுமான மதிப்பெண்களைப் பெறாத போது டிசம்பரில் இதை மீண்டும் எழுதி நல்ல மதிப்பெண் பெற இது உதவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us