பி.இ., முடித்துள்ள நான் விமானப் படையில் என்ன வாய்ப்புகளைப் பெறலாம்? இதற்கு எப்படித் தயாராக வேண்டும்? எங்கு இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன? | Kalvimalar - News

பி.இ., முடித்துள்ள நான் விமானப் படையில் என்ன வாய்ப்புகளைப் பெறலாம்? இதற்கு எப்படித் தயாராக வேண்டும்? எங்கு இதற்கான பயிற்சி நிறுவனங்கள் உள்ளன? பிப்ரவரி 23,2011,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக நமது இளைஞர்கள் ராணுவப் பணி வாய்ப்புகளைப் பற்றி யோசிப்பதே இல்லை. விமானப் படையில் இன்ஜினியர்களுக்கான சிறப்புப் பணியிடங்கள் பல உள்ளன. அது பற்றி முதலில் காண்போம். பிளையிங் பிராஞ்ச், டெக்னிகல் பிராஞ்ச், கிரவுண்ட் டியூட்டி பிராஞ்ச் என 3 பிரிவுகளில் விமானப் படையில் பணிவாய்ப்புகள் உள்ளன.

பிளையிங் பிராஞ்சில் பைட்டர் பைலட், ஹெலிகாப்டர் பைலட், டிரான்ஸ்போர்ட் பைலட் என 3 பிரிவுகளில் வாய்ப்புகள் இன்ஜினியர்களுக்காகக் காத்திருக்கின்றன. ஏர்போர்ஸ் அகாடமி எனப்படும் விமானப் படை கழகத்தில் 3 தேர்வுகள் மூலமாக விமானப் படையில் இன்ஜினியர்கள் அதிகாரிகளாக நுழையலாம்.

கம்பைன்ட் டிபன்ஸ் சர்விசஸ் தேர்வு, என்.சி.சி.,சிறப்பு நுழைவு முறை, பிளையிங் பைலட் குறுகிய கால அதிகாரி நிலைத் தேர்வு ஆகியவை அவை. வாய்ப்பு அறிவிக்கப்பட்ட பின் விண்ணப்பிப்போர் பல்வேறு கட்ட தேர்வு முறைகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும். பைலட் ஆப்டிடியூட் பேட்டரி தேர்வு உளவியல் தேர்வு குழுத் தேர்வு நேர்முகத் தேர்வு மற்றும் குழு கருத்துப் பரிமாற்றம் ஆகியவை அந்த தேர்வு முறைகளாகும்.

பொதுவாக இவற்றில் உளவியல் ரீதியிலான ஆப்டிடியூட் கேள்விகள் இடம் பெறுகின்றன. பிக்சர் பெர்சப்சன் எனப்படும் தரப்படும் ஒரு படத்தின் அடிப்படையில் நமது கருத்துக்களை எழுதுவது, ஆங்கில சொல் வளத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை இவற்றில் இடம் பெறுகின்றன. 3 பிரிவு முறைகளில் எந்த முறையில் விமானப் படையில் நுழைய முயன்றாலும் இந்தத் தேர்வு முறைகளில் வெற்றி பெற வேண்டும். இதற்கான சிறப்புப் பயிற்சி நிறுவனங்கள் நமது மாநிலத்தில் பல இடங்களில் இல்லை என்பதே உண்மை.

அங்கங்கே இயங்கி வரும் ஒரு சில நிறுவனங்களில் எது உண்மையிலேயே சிறப்பான பலனைத் தரும் என்பது பெரிய கேள்விதான். எனவே உப்கார், சுல்தான் சந்த், பிரத்யோகிதா கிரண் போன்ற பதிப்பகங்களின் வழிகாட்டிகளை வாங்கி தனியாகவோ ஒன்றிரண்டு பேராகவோ இந்தத் தேர்வுகளுக்காகத் தயாராவதே அறிவுறுத்தப்படுகிறது. சிறப்பான உடற்திறனும் அவசியம் என்பதால் உங்களது தயாராகும் முறையானது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us