சிறந்த ஆய்வு படிப்புக்கு ரஷ்யா செல்லுங்கள்! | Kalvimalar - News

சிறந்த ஆய்வு படிப்புக்கு ரஷ்யா செல்லுங்கள்!ஜனவரி 09,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

அறிவியல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள, ரஷ்யா, புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது. உலக அறிவியல் நூல்களில், கால் பங்கு நூல்கள், ரஷ்ய மொழியில் மொழி வெளிவந்துள்ளன என்ற தகவல், நமக்கெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். ஐக்கிய நாடுகள் சபையின், 6 அலுவல் மொழிகளில், ரஷ்ய மொழியும் ஒன்று. ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்கும் பாலமாக திகழும் ரஷ்யா, அறிவியல் ஆராய்ச்சிக்கு புகழ்பெற்ற தேசமாக திகழ்ந்து வருகிறது.

சமூக அறிவியல் துறைக்கூட, அந்நாட்டில், அறிவியல் ரீதியான ஆய்வுக்கு உட்பட்டது என்பது பலருக்கும் ஆச்சர்யமான விஷயம். மார்க்சிய கருத்தாக்கத்தின் தாக்கமே, இவை என்பதை எவரும் மறுக்க முடியாது.

அந்நாட்டின் கல்விமுறை

ரஷ்யாவின் கல்விமுறையானது, பெரும்பாலும், மத்திய ஐரோப்பாவின் கல்விமுறையை ஒத்தது. Primary, Secondary, Higher and Post graduate education என்ற வகையில், அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியைப் பொறுத்தவரை, ரஷ்யாவில், 3 வகையான கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. Universities, Academies மற்றும் Institutes என்பவையே அந்த வகைகள். பல்கலை என்பவை, கல்வியின் அனைத்து நிலைகளிலும், பரவலான படிப்புகளை வழங்குகிறது.

அகடமீஸ் என்பவை, அனைத்து நிலைகளிலும் உயர்கல்வியை வழங்குவதோடு, குறிப்பாக, அறிவியல், கலை மற்றும் கட்டிடக்கலை துறைகளில் அதிகளவிலான ஆராய்ச்சிகளை நடத்துகின்றன. இன்ஸ்டிட்யூட்ஸ் என்பவை, ஒரு பல்கலையின் தனித்த உறுப்புகளாய் இருந்து, தொழில்முறை கல்வியை வழங்குகின்றன.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

ரஷ்யாவைப் பொறுத்தவரை, அங்கே, 48 பல்கலைகளும், 519 இன்ஸ்டிட்யூட்களும் உள்ளன. இதன்மூலம், வேறு எந்த ஐரோப்பிய நாடுகளையும்விட, அதிகளவிலான பட்டதாரிகளை உருவாக்கும் நாடாக ரஷ்யா திகழ்கிறது. கம்யூனிச அரசாங்கத்தின் சோவியத் யூனியன் இருந்தபோது, மாணவர்களின் வாழ்க்கை செலவு உட்பட, கல்வி நிறுவனங்களுக்கு தேவையான நிதியுதவிகளை, அரசாங்கமே வழங்கியது.

இந்நாட்டைப் பொறுத்தவரை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ரஷ்யாவின் உயர்கல்வி பட்டத்திற்கென்றே தனி முக்கியத்துவம் உண்டு. பாரம்பரிய ரஷ்ய கல்வி நிறுவனங்களை தவிர, பொருளாதாரம், வணிகம் மற்றும் சட்டம் ஆகிய படிப்புகளை வழங்கும் தனியார் கல்வி நிறுவனங்களும், அந்நாட்டில் உருவாகி வருகின்றன.

பட்டப் படிப்பின் தன்மை

ரஷ்யாவில் உயர்கல்வி என்பது 4 முதல் 6 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது. முதல் 4 வருடத்தில், முழுநேர பல்கலைப் படிப்பை முடித்தால், இளநிலைப் பட்டம் கிடைக்கிறது. அதேசமயம், ஒரு படிப்பின் நிறைவு என்பது, ஆராய்ச்சி திட்டம் மற்றும் அரசு நடத்தும் இறுதி தேர்வில் தேறுதல் போன்ற அம்சங்கள் தேவை. 4 வருட இளநிலைப் பட்டமானது, மருத்துவம் தவிர, பிற துறைகளில் வழங்கப்படுகிறது. ஏனெனில், அத்துறை படிப்பின் முதல் நிலையானது, 6 வருடங்களைக் கொண்டது.

இளநிலைப் பட்டம் பெற்ற ஒருவர், ஸ்பெஷலிஸ்ட் டிப்ளமோ அல்லது முதுநிலைப் படிப்பில் சேர தகுதியுடையவர் ஆவார். ஆனால், படிப்பில் சேர்ந்து, அதை நிறைவுசெய்து விட்டால் மட்டுமே, ஒருவர் முதுநிலை பட்டதாரி தகுதிக்கு வந்துவிட முடியாது. படிப்பை முடித்து, 2 வருடங்கள் கழித்தே அப்பட்டம் வழங்கப்படுகிறது. 1 வருடம், பயிற்சியை உள்ளடக்கிய ஆராய்ச்சி, தயாரிப்பு மற்றும் thesis -ஐ முடிவு செய்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். கூடுதலாக, இறுதி தேர்வையும் நீங்கள் எழுத வேண்டியிருக்கும்.

தனித்தன்மை

தற்போது, இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்புகள் புதியவையாக உள்ளன. அவை, பாரம்பரிய சோவியத் கல்வி முறையில் இல்லை. ஏனெனில், உலகளாவிய அளவில் இன்றைய நிலையில் இருக்கும் கல்வி முறைக்கு ஒத்துவரும் வகையில், இந்தப் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏனெனில் பழைய சோவியத் முறையானது, வெளிநாட்டு மாணவர்களுக்கு சிரமமாக இருந்ததால், அவர்கள் ரஷ்யாவிற்கு வரும் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால்தான், அவர்களை ஈர்க்கும் பொருட்டும், சர்வதேச அளவில் போட்டியிடவும் இந்த மாற்றங்கள்.

பல்கலை அல்லது அறிவியல் கல்வி நிறுவனத்தில் பெற்ற முதுநிலைப் பட்டமானது, ஒரு மாணவர், போஸ்ட் கிராஜுவேட் படிப்பில் சேரும் தகுதியை அளிக்கிறது. அந்த போஸ்ட் கிராஜுவேஷன் படிப்பு 2 நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

முதல் நிலையானது, மேம்போக்கான அளவில் பார்த்தால், அமெரிக்காவின் பிஎச்.டி -க்கு சமமானது. கூடுதல் போஸ்ட்கிராஜுவேட் கல்வியானது(2 முதல் 4 வருடங்கள் கொண்டது), டாக்டர் பட்டத்தை அளிக்கிறது. பிந்தைய பட்டமானது, அரிதாக வழங்கப்படுகிறது.

சேர்க்கை தகுதிகள்

பல்கலைக்கு தக்கவாறு விதிமுறைகள் மாறுபட்டாலும், பெரும்பாலான இடங்களில், உங்களின் முந்தைய கல்வி சாதனைகள், நுழைவுத் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்கிறது. Grades மற்றும் Transcripts போன்றவை, கட்டாயமாக, ரஷ்ய மொழியில், மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக, பிற மொழி மாணவர்கள், தங்களின் முழுநேர படிப்பை தொடங்கும் முன்பாக, ரஷ்ய மொழி படிப்புகளில் சேர்ந்து பயிற்சிபெறும் விதிமுறைகளும் உண்டு.

ரஷ்யாவிலுள்ள முதன்மைப் பல்கலைகள், கடுமையான மாணவர்கள் சேர்க்கை விதிமுறைகளை வைத்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அவை முடிவுகளை எடுக்கின்றன. இளநிலைப் படிப்பிற்கு, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் SAT தேர்வைப்போல், ரஷ்யா முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்க்க, Unified state examination என்ற தேர்வு பயன்படுத்தப்படுகிறது.

MA/M.Sc/Ph.D/D.Sc போன்ற படிப்புகளுக்கு நீங்கள் விண்ணப்பித்தால், அதே துறையிலோ அல்லது அதற்கு மிகவும் நெருங்கிய துறையிலோ, உங்களின் தகுதி நிலைப் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இத்தகைய விதிமுறைகள், ரஷ்யாவில் மிகவும் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் இத்தகைய கட்டாயம் இல்லை.

விசா விதிமுறைகள்

ரஷ்யாவில் அனுமதிக்கப்படும் ஒரு வெளிநாட்டு மாணவர், செல்லத்தக்க விசா வைத்துள்ளாரா என்பது முக்கியமாக கவனிக்கப்படும். ரஷ்ய விசாக்கள், நீங்கள் படிக்கச் செல்லும் கல்வி நிறுவனத்தின் அழைப்புக் கடிதம் இருந்தால் மட்டுமே வழங்கப்படும். இந்த அழைப்புக் கடிதத்தைப் பெற, 75 நாட்கள் ஆகுமென்பதால், முடிந்தளவு விரைவிலேயே அதற்கான பணிகளைத் தொடங்கி விடவும். இந்த 3 மாத விசாவானது, வருடாந்திர விசாவாக, பல்கலையால் நீட்டிக்கப்படும். Study Visa பெற, பல்கலையிடமிருந்து, சிறப்பு அழைப்பு விசாவைப் பெற வேண்டும்.

நிதி

பல நாடுகளை ஒப்பிடுகையில், ரஷ்யாவில், படிப்பதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. பெரும்பாலான ரஷ்ய மாணவர்கள், கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை. பட்டப் படிப்பிற்கான கல்விக் கட்டணமாக, ஒரு வெளிநாட்டு மாணவர், ஆண்டிற்கு, 2000 முதல் 8000 செலவாகும். அதேசமயம், தங்குமிடம், உணவு மற்றும் புத்தக செலவுகளுக்கு, ஆண்டிற்கு, 1500 முதல் 5000 வரை செலவாகும். ஆனால், இந்த செலவானது, அந்தந்த இடம் மற்றும் ஒருவரின் செலவினப் பண்பு ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும். அதேசமயம், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு, Russian Federal Fellowship என்ற பெயரில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

Search this Site

மேலும்

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us