சமூகவியல் - சோஷியாலஜி துறை அறிமுகம் | Kalvimalar - News

சமூகவியல் - சோஷியாலஜி துறை அறிமுகம்மே 10,2009,17:47 IST

எழுத்தின் அளவு :

சமூகம் தொடர்பான உலகம் மற்றும் மாறுபட்ட சூழ்நிலைகளில் மனித இனத்தின் நடவடிக்கைகள் குறித்த படிப்பை சமூகவியல் என்று கூறுகிறார்கள். மனிதர்களின் செயல்கள், வாய்ப்புகள், பழக்கவழக்கங்களை சமூகம் தொடர்புடைய குழுக்கள், நிறுவனங்கள், சமூகப் பிரிவுகள், சமூக அமைப்புகள் எப்படி பாதிக்கின்றன என்று இந்தத் துறை அறிய முயலுகிறது.

சமூகவியலில் இனம் சார்ந்த உறவுகள், நகர்ப்புற சமூகவியல், அரசியல் சமூகவியல், குடும்ப சமூகவியல், சமூக உளவியல் என்று பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன. குழுக்கள், நிறுவனங்கள், சமூகப் பிரிவுகளாக எவ்வாறு மனிதர்கள் ஒன்றுபடுகிறார்கள் என்பதை சமூகவியலின் வாயிலாக அறியலாம். மனிதர்களின் சமூக வாழ்க்கை குறித்த பல்வேறு அம்சங்களையும் சமூகவியல் என்ற ஒரே குடையின் மூலமாக அறிய முடிகிறது.

மனிதர்களின் அனுபவம் மற்றும் செயல் குறித்த அனைத்து அம்சங்களையும் இந்தத் துறை உள்ளடக்கியுள்ளது. வரலாறு, பொருளாதாரம், உளவியல், சமூக அறிவியல், மானுடவியல் போனற் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து அறியும் வாய்ப்பை இத்துறை உருவாக்குகிறது. பல்வேறு பிரிவுகள் மற்றும் கல்வித் துறை மீது ஈடுபாடு கொண்டவர்களுக்கு ஏற்ற துறையாக இது உள்ளது.

என்ன தேவை
சமூகவியல் துறையில் இணைய அடிப்படைத் தேவையாக இருப்பது சமூக விழிப்புணர்வுதான். சமூகவியலின் முதல் பாடமே ஒன்றே ஒன்று மட்டுமே உண்மை இல்லை என்பது தான். எனவே நியாயமான மற்றும் பரந்த மனப் பான்மையுடன் கூடிய அணுகுமுறை இத்துறையினருக்குத் தேவை. இவை தவிர நிர்வாகத்திற்ன, புள்ளியியல் விபரங்களை ஆராயும் தன்மை, தகவல்களை வைத்து முடிவெடுக்கும் திறன், தகவல்களை வெளிப்படுத்தும் திறன், சந்தை குறித்த அணுகுமுறை, சமூகம் சார்ந்த மனித இன மேம்பாடு, நிறுவனம் குறித்த தெளிவு, ஆராய்ச்சிக்கான வழிமுறைகள் போன்ற திறமைகள் கூடுதலாகத் தேவைப்படுகின்றன.

கல்வித் தகுதிகள்
சமூகவியலில் பிளஸ் 2வில் தொடங்கி, இளநிலைப் பட்டம், பட்ட மேற்படிப்பு, ஆய்வுப் படிப்புகள் என்று பல நிலைகள் உள்ளன. பிளஸ்2வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்கள் சமூகவியலில் பட்டப்படிப்புகளை மேற்கொள்ளலாம். இதேபோல முதுநிலைப் படிப்புகளைத் தொடர இளநிலைப் பிரிவில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். முதுநிலைப் படிப்பை முடித்தபின் எம்.பில்., அல்லது பிஎச்டி., படிக்கலாம்.

என்ன பாடங்கள் உள்ளன
சமூகவியலில் இந்தியா முழுமையுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பகுதிகளில் பாடங்கள் உள்ளன. வரலாறு, சமூக சிந்தனை, மக்கள் தொகை, வளர்ச்சியின் சமூகக் காரணிகள், விவசாயம் மற்றும் கிராமப்புற சமூகவியல், குடும்ப சமூகவியல், சட்ட அமைப்பு மற்றும் சுகாதாரம், தொழில் சார்ந்த சமூகவியல், மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணிகள் மற்றும் காரணங்கள், மனித இன இடமாற்றத்தின் சமூகவியல், சுற்றுச்சூழல் பிரச்னை போன்ற பகுதிகளைப் படிக்க வேண்டும்.

வாய்ப்புகள் எப்படி
சமூகவியலில் பட்டமேற்படிப்பு, எம்.பில்., பிஎச்டி., போன்றவற்றை முடிப்பவர்கள் கல்வி நிறுவனங்களில் விரிவுரையாளராகப் பணி புரியலாம். இது தவிர மனித வள
அலுவலர், ஆய்வாளர், களப் பணி ஆய்வாளர், நிறுவனப் பணி ஆசிரியர் போன்ற பணிகளைப்பெறலாம்.

ஆய்வுத் துறையில் டேட்டா அனலிஸ்ட், சர்வே ரிசர்ச்சர், புராஜக்ட் மேனேஜர் போன்ற பணிகளில் சேரலாம். அரசு நிறுவனங்களில் ஊழியர் ஒருங்கிணைப்பாளர், சமூகப்பணி அலுவலர், வெளிநாட்டுப் பணி அலுவலர், மனித உரிமை அலுவலர் போன்ற பணிகளைப் பெற முடிகிறது.

சமூக உளவியலில் சிறப்புப் படிப்புகளை மேற்கொள்பவர்கள் என்.ஜி.ஓ.க்களிலோ மருத்துவமனைகளிலோ கவுன்சலராகப் பணி புரியலாம். மருத்துவ சமூகவியலில் சிறப்புப் படிப்பு மேற்கொண்டவர்கள் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவில் தகவல் சேமிக்கும் அலுவலராகப் பணியாற்றலாம்.

சமூக நலப் பிரிவில் சிறப்புப் படிப்புகளை மேறகொள்வதன் மூலமாக மருத்துவமனைகள் மற்றும் அரசு சாராத நிறுவனங்களில் பணி பெறும் வாய்ப்புகள் அதிகமாகிறது. குழந்தைகளோடு தொடர்புடைய துறைகளில் சமூகவியல் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. சர்வதேச நிறுவனங்களான உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா., போனற்வற்றில் சமூகவியலில் அனுவமும் திறனும் கொண்டவருக்கு வாய்ப்புகள் உள்ளன. பெருமைமிக்க சிவில் சர்விசஸ் தேர்வில் சமூகவியல் பலரால் விருப்பப்பாடமாக எடுக்கப்படுகிறது.

இநதியாவின் பல மாநிலங்களில் பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சமூகவியலில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு போன்றவை நடத்தப்படுகின்றன.

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us