சமத்துவம் தேடும் சமச்சீர் கல்வி | Kalvimalar - News

சமத்துவம் தேடும் சமச்சீர் கல்வி

எழுத்தின் அளவு :

இப்போது ஊரெங்கும் ஒரே பேச்சு சமச்சீர் கல்வி. சமச்சீர் கல்வி முறை என்றால் என்ன?

தமிழகத்தில் அரசு நடத்தும் உயர்நிலைப்பள்ளிகள் 2,053; மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் 1,421; ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 41. இது தவிர, ஒரு சில ஓரியண்டல் பள்ளிகளும் உண்டு. மேற்கண்ட அனைத்து பள்ளிகளிலும், ஒரே தரமான கல்வி வழங்கும் சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக அரசுக்கு அறிக்கை அளிக்க, 2006ல், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முத்துகுமரன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

தமிழகத்தின் அனைத்து பள்ளிகளிலும் ஒரே தரமான சமச்சீர் கல்வி முறையைச் செயல்படுத்தும் வகையில், இக்குழு தயாரித்துள்ள பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கை, முதல்வர் கருணாநிதியிடம் ஜூலை 2007ல் வழங்கப்பட்டது.

அதில் உள்ள முக்கிய பரிந்துரைகள்...
* இப்போதுள்ள நான்கு கல்வி முறைகளுக்கு பதிலாக, ‘ஒருங்கிணைந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வி வாரியம்’ என்ற அமைப்பை நிறுவ வேண்டும்.
* தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வி தமிழிலேயே அளிக்க வேண் டும். பிற மொழி மாணவர்களுக்கு தமிழை ஒரு பாடமாக பயிற்றுவிக்க வேண்டும்.
* எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் அடங்கிய, ‘கிண்டர் கார்டன்’ கல்விக்கு அரசே முழு பொறுப்பேற்று, அரசின் கட்டுப்பாட்டிலேயே இக்கல்வி அளிக்க வேண்டும்.
* அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமைக்க வேண்டும்.
* கடுமையான பாடத்திட்டத்தின் மூலம், மாணவர்களை துன்புறுத்தக் கூடாது; மனப்பாடம் செய்யும் முறை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
* சமச்சீர் கல்வி முறை, பத்தாம் வகுப்பு வரை அறிமுகப்படுத்த வேண்டும்.

ஒன்றிரண்டு நீங்கலாக இப்பரிந்துரைகள், இப்போது சட்ட வடிவம் பெற்று, முதற்கட்டமாக அடுத்த ஆண்டு முதல், ஒன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்புக்கு மட்டும் நடைமுறையாக்க உள்ளது.

ஒரு ஜனநாயக நாட்டில், எல்லா குழந்தைகளும் ஒரே மாதிரியான கல்வியை கற்க வேண்டும் என்ற கருத்தை யாரும் மறுக்க முடியாது. எனவே, ‘சமச்சீர் கல்வி வேண்டாம்’ என்று, அரசு அங்கீகாரம் பெற்றுள்ள தனியார் பள்ளிகள் சொல்ல முடியாது. அதே சமயம், இருப்பது ஒரு கல்வி முறை; இதைத் தான் கற்க வேண்டும் என்று யாரையும் வற்புறுத்தவும் முடியாது.

சமச்சீர் கல்வியை அளிக்கும் போது, கீழ்கண்ட சிக்கல்கள் ஏற்படலாம்...
* இப்போது நடைமுறையில் உள்ள மாநில பாடத் திட்டம், மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பாடத் திட்டங்களில் எதை அடிப்படையாக வைத்து, ‘சமச்சீர் கல்வி முறை’ அமையப் போகிறது என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

* பாடத் திட்டத்தில் சுலபம், கடினம் என்ற அளவுகோலை வைத்துப் பார்க்கையில், அரசுப் பள்ளிகளில் பின்பற்றப்படும் பாடத் திட்டம் சுலபமானது; அதை விட கடினமானது மெட்ரிகுலேஷன் பாடத் திட்டம்.

உதாரணமாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் படிப்பவர்கள் மொழிப் பாடங்கள் தவிர, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என மூன்று பாடங்களை மூன்று புத்தகங்களாகப் படிக்கின்றனர். ஆனால், மெட்ரிக் பாடத் திட்டத்தின் கீழ் படிப்பவர்கள் மொழிப் பாடங்கள் தவிர, கணிதம் -1, கணிதம் -2, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் என அதே மூன்று பாடங்களுக்காக, எட்டு புத்தகங்களைப் படிக்கின்றனர்.

இன்னும் விளக்கமாகச் சொன்னால், மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள், நூற்றுக்கணக்கான பக்கங்கள் அடங்கிய புத்தகங்களையும், மெட்ரிக் முறையின் கீழ் அதை விட மூன்று மடங்கு அதிகமான பக்கங்கள் அடங்கிய புத்தகங்களையும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
புதிதாக அறிமுகப்படுத்த உள்ள சமச்சீர் கல்வி முறையில் 10ம் வகுப்பு மாணவன், எத்தனை பக்கங்கள் படிக்கப் போகிறான் என்பது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

வரலாறு பாடத்தில் இந்திய வரலாறு மட்டும் படித்தால் 200 பக்கங்கள் போதுமானது. ஆனால், உலக வரலாறும் ஒரு 10ம் வகுப்பு மாணவன் படிக்க வேண்டுமென்றால், 400 பக்கங்கள் படிக்க வேண்டும். ஆக சுலபம், கடினம் என்ற அளவுகோலை வைத்து பார்க்கையில், சுலபமான மாநில பாடத் திட்டத்தை வைத்தே சமச்சீர் கல்வி முறை அமைய வாய்ப்பு உண்டு.

ஏனெனில், ‘பாடத் திட்டத்தைக் கடுமையாக, சுமையானதாக ஆக்கி, மாணவர்களிடத்தில் திணிக்கக்கூடாது’ என்பது டாக்டர் முத்துகுமரன் பரிந்துரைகளில் ஒன்றாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, தமிழகத்தில் நடைபெற்ற பொறியியல், மருத்துவ நுழைவுத் தேர்வுகளில், மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவர்களே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்பது அதிகாரபூர்வ உண்மை.

இந்தியாவில் ஆண்டுதோறும் 400 ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உருவாகின்றனர். ஆனால், தமிழகத்திலிருந்து சராசரியாக 10 அல்லது 20 பேர் தான் வெற்றி பெறுகின்றனர். அதாவது, வெறும் 2.5 முதல் 5 சதவீதம் தான், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம். ஏனெனில், இவ்வகைத் தேர்வுகளில் கடுமையான பாடத் திட்டத்தின் கீழ், ஒன்றரை ஆண்டு காலம் படித்து தேர்ச்சி பெற வேண்டும்.

அதேபோல், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சீட் கிடைக்க வேண்டுமென்றால், நிறைய விஷயங்களை ஆராய்ந்து கற்க வேண்டும். எளிமையான பாடத்திட்டம் என்பது நடைமுறையாகி விட்டால், இந்நிறுவனங்களில் தமிழக மாணவர்களுக்கு சீட் கிடைப்பது கானல் நீராகி விடும்.

கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குறைவாகவும், சுமாராகவும் படித்தாலே போதும் என்ற அளவில், மக்கள் தொகை குறைவு; வேலைவாய்ப்பு அதிகம். இங்கு நிலைமை தலைகீழ். நிறைய கடினமான கேள்விகள் கேட்டு, பலரை வடிகட்டி, சிலரைத் தேர்ந்தெடுக்க வேண்டி இருக்கிறது.

‘கடுமையான கல்வி’ என்று பார்க்காமல், ‘தரமான, நிறைவான கல்வி’ என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் படிக்கும் நம் மாணவர்களுக்கு, பிற நாடுகளில் வேலைவாய்ப்பில் நல்ல வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணம், நம்மவர்கள் நிறைய விஷயங்களைப் படித்து, திறமைசாலிகளாக இருப்பதால் தான்.

பலமுறை கல்வித் திட்டம் மாபாதகம் அல்ல.  ஒன்று இல்லையேல், இன்னொன்றை தேர்ந்தெடுக்க வகை செய்யும், பல்வேறு கல்வி முறைகள் இருப்பதில் தவறில்லை. தேசிய அளவில் கூட சென்ட்ரல் போர்டு, நவோதயா, ஐ.சி.எஸ்., போன்ற பல்வேறு கல்வி முறைகள் உள்ளன. மாநில பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும் என்றோ அல்லது மெட்ரிக் பாடத் திட்டத்தில் படிக்க வேண்டும் என்றோ இங்கு யாரும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.

அதேபோல, தமிழகத்திலும் இப்போது கூட 10ம் வகுப்புக்குப் பின் அறிவியல், வணிகவியல் என பல்வேறு கல்வி முறைகள் உள்ளன. பத்தாம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்தே, இன்னாருக்கு இந்த குரூப் என்று இங்கும் மாணவர்கள் தரம் பிரிக்கப்பட்டு, வேறுபடுத்தப்படுகின்றனர்.

அதாவது பத்தாம் வகுப்புக்குப் பின், திறமைக்கேற்ற கல்வி என்றாகி விடுகிறது. இதேபோல் தான் கீழ்நிலையிலும் அவரவர் விருப்பத்திற்கேற்ப, திறமைக்கேற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் பல கல்வித் திட்டங்கள் இருந்தால் நல்லது தான். எனவே, இப்போது இருக்கும் கல்வி முறைகளை மாற்றாமல், மாநில பாடத்திட்டத்தை மேம்படுத்தலாம் அல்லது சமச்சீர் கல்வி தான் வேண்டும் என்றால், மெட்ரிக் பாடத் திட்டத்துக்கு நிகராக, பாடத் திட்டம் அமைந்தால் நல்லது.

பி.புருஷோத்தமன்
தாளாளர் - முதல்வர்
எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, சென்னை

Search this Site

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us