
பிளஸ் 2 தேர்வு முடிந்து பொறியியல் படிக்க வேண்டும் என்று முடிவான பிறகு, ஒரு மாணவர் இந்தப் பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கலாம் என்று திட்டமிட்டிருப்பார். அதைப் பற்றி பலரிடமும் விசாரித்து, அந்த பாடப்பிரிவு எந்த கல்லூரியில் சிறப்பாக இருக்கும் என்று ஆராய்ந்து வைத்திருப்பர். இந்த நிலையில் பொறியியல் கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், வேறு ஒரு பாடப்பிரிவை ஏராளமான மாணவர்கள் தேர்வு செய்வார்கள். இதனைப் பார்க்கும் போது ஏற்கனவே இந்த பாடத்தைத்தான் படிப்பது என்று திட்டமிட்டிருந்த மாணவருக்கு ஒரு சில குழப்பங்கள் ஏற்படலாம். நாம் எடுக்கும் பாடப்பிரிவிற்கு முக்கியத்துவம் இருக்காதோ, வேறு ஒரு பாடத்திட்டத்தையே மாணவர்கள் அதிகம் விரும்பக் காரணம், அதற்கு நல்ல பணிவாய்ப்பு இருக்குமோ என்ற எண்ணம் தோன்றும். இந்த எண்ணங்கள் உங்களது முடிவை ஒரு முறை சரிபார்த்துக் கொள்ள வேண்டுமானால் இருக்கலாமேத் தவிர, உங்கள் முடிவையே மாற்றும் வகையில் அமைந்துவிடக் கூடாது. உங்களுக்குப் பிடித்த, உங்களுக்கு சற்று தெரிந்து ஒரு துறையை நீங்கள் எடுத்துப் படிப்பது என்பது உங்களுக்கு நன்மையளிக்கும். மற்றவர்கள் எடுக்கிறார்கள், மற்றவர்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக எந்த முடிவையும் மாற்றாதீர்கள்.